Main Menu

கொரோனா வைரஸை விட பா.ஜ.க பயங்கர ஆயுதமாகி வருகிறது: கே.எஸ்.அழகிரி

கொரோனா வைரஸை விடவும் மிகவும் ஆபத்தான ஆயுதமாக பா.ஜ.க இன்று விளங்கி வருகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனதை அடுத்து, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கே.எஸ்.அழகிரி மேலும் கூறியுள்ளதாவது, “இன்று தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளோம். இந்த நிகழ்ச்சி மகிழ்ச்சியையும் எழுச்சியையும் எங்களுக்கு அளித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் பன்னெடுங்காலமாகவே சொல்லி வருகின்ற தத்துவம் என்னவென்றால் மதச்சார்பற்ற இந்தக் கூட்டணி ஒரு நேர்க்கோட்டில் எங்களை இணைத்துள்ளது.

பல்வேறு அரசியல் கட்சிகள் சேர்ந்து இந்த மதச்சார்பற்ற கூட்டணியை அமைத்துள்ளோம். அதில் எங்களை இணைப்பது இந்த மதச்சார்பற்ற தன்மைதான். அது வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான் தி.மு.க.விலிருந்து இந்தக் கூட்டணியில் உள்ள ஒவ்வொருவரும் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறோம்.

பா.ஜ.க இன்றைக்கு இந்தியாவுடைய மிகப்பெரிய நோயாக வளர்ந்துள்ளது. அது நோயாக இருப்பதைவிட மற்றவர்கள் மீதும் அதைப் பரப்பும் வேலையைச் செய்து வருகிறார்கள். கொரோனா வைரஸை விட மிகவும் ஆபத்தான ஆயுதமாக பா.ஜ.க இன்று விளங்கி வருகிறது.

இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளில் உட்புகுவது, அதை உடைப்பது, அதை பலவீனப்படுத்துவது அல்லது அதில் இருப்பவர்களை கட்சி மாற வைப்பது, அரசாங்கத்தைக் கவிழ்ப்பது அல்லது அரசாங்கத்தைச் சீர்குலைப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் பா.ஜ.க ஈடுபடுகிறது” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பகிரவும்...