Main Menu

கொரோனா பரவலை சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூஸிலாந்துக்கு முதலிடம்!

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை சிறப்பாக கையாண்ட நாடுகளின் பட்டியலில், நியூஸிலாந்து முதலிடம் பிடித்துள்ளது.

சிட்னியை தலைமை இடமாகக் கொண்ட லோவி நிறுவனம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பாக செயற்பட்ட நாடுகள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தியது.

98 நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் குறித்து இந்த நிறுவனம் ஆய்வு செய்தது. இதில் நோய் கட்டுப்பாடு, அரசியல் செயல்பாடு, பொருளாதார நிலை பராமரிப்பு ஆகியவையும் கண்காணிக்கப்பட்டது.

இதில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையை சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூஸிலாந்து முதல் இடம் பிடித்ததாக தெரிய வந்துள்ளது. கொரோனா உயிர் இழப்பும் இங்கு மிகக்குறைவாக இருந்தது.

கடந்த 36 வாரங்களில் 98 நாடுகளில் எடுத்த புள்ளி விபரங்களின்படி கொரோனா பரிசோதனை, முன் எச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு முயற்சிகளில் நியூஸிலாந்து சிறப்பாக செயற்பட்டது தெரிய வந்துள்ளது.

நியூஸிலாந்தை அடுத்து வியட்நாம், தாய்வான், தாய்லாந்து நாடுகளும் கொரோனா பரவலை தடுப்பதில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் 94ஆவது இடத்தில் உள்ளது.

கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் நடவடிக்கை பற்றிய முழு விபரங்கள் கிடைக்காததால் இந்த ஆய்வில் அந்த நாடு இடம்பெறவில்லை.

தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் இலங்கை கொரோனா கட்டுப்படுத்துதலில் 10ஆவது இடத்தை பிடித்துள்ளது.

பகிரவும்...