Main Menu

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கோவை முதலிடம்- அமைச்சர் பேட்டி

கொரோனா 3-வது அலை வராது என்றே கருதுகிறோம். அப்படியே வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கும் தயார் நிலையிலேயே உள்ளோம்.

2-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

கடந்த 12-ந் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அன்று ஒரு நாள் நடைபெற்ற சிறப்பு முகாமில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று 2-வது கட்டமாக தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோவையில் 706 இடங்களில் 2-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு செலுத்த மாவட்ட நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

இந்த 2-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை பொள்ளாச்சி தலைமை ஆஸ்பத்திரியில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து அவர் மத்திய அரசு நிதியின் கீழ் ரூ.1 கோடியில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம், ஏ.சி.டி கிராண்ட்ஸ் நிறுவனத்தினரால் சி.எஸ்.ஆர் நிதியின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பிலான ஆக்கிஜன் உற்பத்தி மையத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். மேலும் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் அவர் தமிழக- கேரள மாநில எல்லையான பொள்ளாச்சி மீனாட்சிபுரம் பகுதியில் அமைச்சர் சுப்பிரமணியன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த வாகனங்களில் வந்தவர்களிடம் கொரோனா பரிசோதனை செய்துள்ளார்களா? 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனரா? என அமைச்சர் விசாரித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்று 2-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பொள்ளாச்சியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் மையங்களில் 15 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயித்து அதற்கான பயணத்தை இங்கு ஆரம்பித்துள்ளோம்.

ஏற்கனவே கடந்த 12-ந் தேதி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் அன்றைய தினம் நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக 28 லட்சத்து 91 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்திய அளவில் மிகப்பெரிய தடுப்பூசி முகாமாக அது மாறியது.

தற்போது தமிழகத்தில் 16 லட்சம் அளவிலான தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. அதனை வைத்து கொண்டு இன்று 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து பணிகள் நடந்து வருகிறது. இதிலும் மகத்தான வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

கொரோனா 3-வது அலை வராது என்றே கருதுகிறோம். அப்படியே வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கும் தயார் நிலையிலேயே உள்ளோம்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 19 இடங்களில் ஆக்கிஜன் உற்பத்தி மையம் தொடங்கி ஆக்சிஜன் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதுபோன்று தமிழகத்தின் பல இடங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டுள்ளதால் கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்று ஆக்சிஜன் பற்றாக்குறை நிகழாது. அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.

தமிழகத்தில் நேற்று இரவு வரை 4 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் கோவை முதலிடத்தில் உள்ளது.

இங்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 22 லட்சத்து 4 ஆயிரத்து 631 பேர். அதாவது இது 75 சதவீதம் ஆகும். 2-வது தவணை தடுப்பூசியை 7 லட்சத்து 18 ஆயிரத்து 333 பேர் ஊசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதாவது இது 25 சதவீதம் ஆகும். 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தியதிலும் கோவை மாவட்டமே முதலிடம் வகிக்கிறது.

பல மாவட்டங்களில் தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்தாலும் கோவையில் 200 என்ற அளவிலேயே உள்ளது. இதனை கட்டுப்படுத்த தான் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தொற்றை எப்படியாவது 200-க்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் அதனை குறைப்பதில் மிகப்பெரிய சவால் உள்ளது.

அதற்கு காரணம் கோவை மாவட்டத்தில் மட்டும் 13 வழித்தடங்களில் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன. 13 எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் பணி நிமித்தமாகவும், வியாபார நிமித்தமாக கேரளத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் ஜிகா, நிபா வைரசுகளும் மிரட்டி வருகின்றன.

இதனால் எல்லை பகுதிகளில் உள்ள தமிழக மலை கிராமங்களிலும் சுகாதாரத்துறையினர் மூலம் தினமும் மருந்து தெளிக்கப்பட்டு, மக்களும் விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஜிகா, நிபா போன்றவை தமிழகத்தை இதுவரை எட்டிபார்க்கவில்லை.

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் விபத்துக்கு என்று தனிப்பிரிவு உருவாக்கப்படும். மேலும் இங்குள்ள மகப்பேறு டாக்டர்களை மாற்ற கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆஸ்பத்திரியில் தற்போது கட்டப்பட்டு வரும் கட்டிட பணி விரைவில் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...