Main Menu

கொரோனா : இளைஞர்களும் தப்பமுடியாது..!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையோ 13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

சீனாவில் இருந்து பரவிய கொரோனாவின் தாக்குதலுக்கு அந்த நாட்டிலேயே 81 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக ஏதுமற்ற நிலையில் நேற்றும் அதே நிலைமை தொடர்ந்தது. ஆனால் இங்கிலாந்தில் புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் அமெரிக்காவில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு 45 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் உலக அளவில் புதிதாக 29 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, ஆயிரத்து 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலியில் கொரோனாவால் முதல் இறப்பு பதிவாகி உள்ளது.

சிங்கப்பூரில் தொற்றுநோய் அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கலிபோர்னியா உள்ளிட்ட குறிப்பிட்ட மாகாணங்களில் பேரழிவு நிலையை அதிபர் டிரம்ப் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு விரைவாகவும், அடிக்கடியும் சோதனை நடத்துவதற்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். தங்களிடம் லட்சக்கணக்கில் முகக்கவசங்கள் இருப்பதாகவும், அவற்றை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்க இருப்பதாகவும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இல்லினாய்ஸ் மாகாணத்தில் மக்கள் இன்று மாலை 6 மணி வரை வீடுகளுக்குள் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் வயதானவர்களுகே பாதிப்பு என்றிருந்த நிலையில் வைரஸ் தொற்று ஏற்பட்டால், இளைஞர் கூட வாரக் கணக்கில் மருத்துவமனையில் அவதியுறவோ உயிரிழக்கவோ நேரிடலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பகிரவும்...