Main Menu

கொரொனா : ஐரோப்பிய நாடுகளில் ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் தீவிரமாக ஆதிக்கம் செலுத்திவரும் கொரோனா வைரஸ் இதுவரை 21ஆயிரத்து 295 பேரின் உயிரைப் பறித்துள்ளது.

நேற்று இரவு வரையான காலப்பகுதியில் 4 இலட்சத்து 71ஆயிரத்து 417 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 48 ஆயிரத்து 440 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஒரேநாளில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 388 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன் இதுவரை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 642பேர் தொற்றிலிருந்து குணமாகி வெளியேறியுள்ளனர். இதனிடையே கடந்த இரண்டு நாட்களில் உயிரிழப்பு 2 வீதம் அதிகரித்து 16 வீதமாக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனாவின் உச்சக்கட்ட ஆக்கிரமிப்பில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளே நிலைகுலைந்து போயுள்ளன. இத்தாலியில் ஏறத்தாழ 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் புதிதாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதில், 3 ஆயிரத்து 500 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாலியில் மொத்தமாக 683 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் கடந்த மாதம் 25ஆம் திகதி பூச்சியமாக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அங்கு தினசரி இறப்பவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருப்பதால் இராணுவ வாகனங்களில் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு மொத்தமாக அடக்கம் செய்யப்படுகின்றன.

மேலும் கிறிஸ்தவ நாடான இத்தாலியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான சவப்பெட்டிகள் கிடைப்பதிலும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில், மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 500 பேர் புதிதாக கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 3 ஆயிரத்து 200 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நாட்டில் நேற்று மட்டும் 656 பேர் மரணித்துள்ளனர்.

இதையடுத்து, பிரான்ஸில் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 3 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களில் 2 ஆயிரத்து 800 பேர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நேற்று மட்டும் 231பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனாவால் அங்கு தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.

நேற்று மட்டும் அமெரிக்காவில் 13 ஆயிரத்து 355 பேர் புதிய நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 247 உயிரிழப்பு பதிவாகியுள்ளதுடன் மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது.

இவை தவிர ஈரானில் நேற்று ஒரே நாளில் மட்டும் 143 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதுடன் இரண்டாயிரத்து 200 பேர் புதிய நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஜேர்மனியில் நேற்று மட்டும் 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் பிரித்தானியாவில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, பெல்ஜியத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தாக்கம் இப்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளதுடன் அங்கு ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், நெதர்லாந்தில் நேற்று மட்டும் 80 பேர் மரணித்துள்ள நிலையில் ஒட்டுமொத்தாக பல்வேறு நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துகொண்டே செல்கின்றது.

இதேவேளை, சீனாவில், கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் வுஹான் நகரில், 9 வாரங்களுக்குப் பிறகு, மீண்டும் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அனைத்து பயணிகளுக்கும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே, பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இதெற்கென, ஒவ்வொரு பேருந்திலும், பிரத்தியேகமாக பாதுகாப்பு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் நோய்த் தொற்றின் அபாயத்தைக் குறைக்க 65 வயதுக்கு மேற்பட்டோர், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் ஒட்டுமொத்தமாக 81ஆயிரத்து 218 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 73 ஆயிரத்து 650பேர் குணமடைந்துள்ளனர். அங்கு நேற்று 47 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 4 உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன. மொத்த உயிரிழப்பு 3,281 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த சூழலில் அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டு நிலைமை சீரடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...