Main Menu

கொங்கோ சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தி 900 கைதிகளை தப்பிக்க வைத்த ஆயுதக் குழு!

கொங்கோ ஜனநாயக குடியரசிலுள்ள மத்திய சிறைச்சாலை மற்றும் இராணுவ முகாம் மீதான தாக்குதலால், பெனி சிறையில் இருந்து சுமார் 900 கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்க்பாய் மத்திய சிறைச்சாலை மீதும், அதற்கு பாதுகாப்பு அளிக்கும் இராணுவ முகாமின் மீதும் ஒரே நேரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஆயுதமேந்திய போராளிகள் குழு தாக்குதல் நடத்தியது.

1,000க்கும் மேற்பட்ட கைதிகளில் தற்போது 100பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர் என்று நகர மேயர் மொடெஸ்டே பக்வனமஹா கூறினார்.

அதிக எண்ணிக்கையிலான தாக்குதல் மற்றும் மின்சார உபகரணங்களுடன் ஆயுததாரிகள் வந்ததால், அவர்கள் சிறைச்சாலை கதவை உடைத்தாகவும் நகர மேயர் மேலும் தெரிவித்தார்.

எந்தவொரு குழுவும் உடனடியாக தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஆனால் உகாண்டா ஆயுதக் குழுவான ஏ.டி.எஃப் தான் தாக்குதல் நடத்தியிருக்க கூடுமென நாங்கள் நம்புவதாக பக்வனமஹா கூறினார்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4:30 மணியளவில் தொடங்கிய சோதனையின் போது இரண்டு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று பொலிஸார் டுவிட்டரில் தெரிவித்தனர். அத்துடன் பொலிஸார் 1,300க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு சிறை தாக்கப்பட்டபோது இதேபோன்ற எண்ணிக்கையிலான கைதிகள் தப்பியோடியதையும் அதிகாரிகள் நினைவுக்கூர்ந்தனர்.

பகிரவும்...