Main Menu

கேரளாவில் கனமழை நீடிப்பு- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

கேரளாவில் கனமழை மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக கடலோர மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ரெயில் சேவை மற்றும் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை நீடிப்பதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி வெள்ளம் மற்றும் நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். வயநாட்டில் 9 பேர் இறந்துள்ளனர். 

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 699 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 988 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. வயநாட்டில் இருந்து மட்டும் 24 ஆயிரத்து 990 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 
வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மோசமான வானிலை நிலவுவதால் அங்கு மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வயநாட்டின் மேப்பாடியில் உள்ள புதுமலா கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நிலச்சரிவால் பல கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளன. அங்கு 1000க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

பகிரவும்...