Main Menu

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு : உதயநிதி ஸ்டாலின் கைது!

சிறுபான்மையினரை பாதிக்கும் குடியுரிமை சட்டத்திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்று வருவதுடன் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்தும், அதற்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசை கண்டித்தும் தி.மு.க சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஒருபகுதியாக  சென்னையில் பிரம்மாண்ட பேரணியானியொன்றும்  முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேரணிக்கு தி.மு.கவின்  இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை  தாங்கியிருந்ததுடன், 600இற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது,  மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த  சட்டமூலத்தை  உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து ஆற்காடு பேருந்து நிலையத்தில் குடியுரிமை சட்டதிருத்தத்தை ரத்து செய்யக்கோரி சட்ட நகலை கிழித்து தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து குறித்த  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...