Main Menu

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து – அனைத்து வழக்குகளையும் நவ.14 முதல் மேல் நீதிமன்றம் விசாரிக்கும்

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட் அமர்வு நவம்பர் 14-ம் தேதியில் இருந்து விசாரணையை தொடங்கவுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய பாஜக அரசு சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது. இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்களாட்சி தத்துவத்துக்கு எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்து வந்த தலைமை நீதிபத் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என பரிந்துரைத்தார்.

இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் இணைத்து விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 28-ம் தேதி அமைக்கப்பட்டது.

நீதிபதி ரமணா தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.கே.காண்ட், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி ஆர் கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

5 நீதிபதிகள் அமர்வு

இந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் முதல் தேதியில் இருந்து இந்த வழக்குகளை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு  5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்களின் ஆட்சேபனைகளுக்கு மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீர் அரசு தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என அரசுதரப்பு வழக்கறிஞர்கள் கோரினர்.

2 வாரங்களுக்கு மேல் அவகாசம் அளிக்க கூடாது என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அரசுதரப்பில் விளக்கம் அளிக்க ஒருமாதம் அவகாசம் அளித்தது.

ஒருமாதத்துக்குள் மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீர் அரசு தரப்பில் அளிக்கப்படும் விளக்கம் தொடர்பாக மனுதாரர்கள் சார்பில் பதில் அளிக்க ஒருவார கால அவகாசமும் அளித்த நீதிபதிகள் மறுவிசாரணை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தனர்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக இனி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பகிரவும்...