Main Menu

கல்வியிலிருந்து மதம் வெளியேற்றம்: தீவிரவாத சிந்தனையைத் துடைத்தெறிய வேண்டும் – மக்ரோன்

கல்வியிலிருந்தும் பொதுத் துறையிலிருந்தும் மதத்தை வெளியேற்றுவதற்கான செயற்பாட்டில் எவ்வித சலுகைகளும் வழங்கப்படாது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

தீவிர இஸ்லாத்திற்கு எதிரான பிரான்சின் மதச் சார்பற்ற விழுமியங்களைக் காக்கும் திட்டத்தை ஜனாதிபதி மக்ரோன் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார்.

இதன்போது, பள்ளிக்கல்வி குறித்த கடுமையான மேற்பார்வை மற்றும் மசூதிகளுக்கான வெளிநாட்டு நிதியுதவிகள் குறித்து சிறந்த கட்டுப்பாட்டையும் அவர் அறிவித்தார்.

பரிஸிற்கு வெளியே உள்ள வரலாற்று ரீதியாக புலம்பெயர்ந்த மக்களைக் அதிகமாகக் கொண்ட லெஸ் மியூரொக்ஸ் என்ற நகரத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.

இதன்போது மக்ரோன் தெரிவிக்கையில், “உலகெங்கிலும் இஸ்லாம் மதம் நெருக்கடியில் உள்ள ஒரு மதமாகக் காணப்படுகின்றது. இந்த நெருக்கடி நம் நாட்டில் மட்டும் இல்லை.

ஐரோப்பாவில் மிகப்பெரிய முஸ்லிம் மக்களைக் கொண்ட எமது நாட்டில் புதிய மதமாற்றங்களைக் கற்பிக்க தீவிரவாதிகள் முயல்கின்றனர்.

குறுங்குழுவாதத்தின் இந்த வடிவம் பெரும்பாலும் பிள்ளைகளை பள்ளியிலிருந்து வெளியேற்றுவதையும் விளையாட்டு, கலாசார மற்றும் பிற சமூக நடவடிக்கைகளில் பிரான்ஸ் குடியரசின் சட்டங்களுடன் ஒத்துப்போகாத கொள்கைகளை கற்பிப்பதிலும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில், பள்ளிகளிலும் மசூதிகளிலும் தீவிரவாத மத போதனைகளை ஒழிப்பதற்கான புதிய முயற்சியில் எந்த சலுகையும் வழங்கப்பட மாட்டாது.

மதத்தையும் அரசாங்கத்தையும் அதிகாரபூர்வமாகப் பிரிக்கும் 1905ஆம் ஆண்டின் நாட்டின் அடிப்படையை வலுப்படுத்தும் சட்ட வரைபை அரசாங்கம் டிசம்பரில் முன்வைக்கும்.

அதேநேரம், புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு பொருளாதார மற்றும் சமூக நடமாட்டத்தை வழங்க பிரான்ஸ் அதிகம் ஈடுபாட்டை காட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மக்ரோனின் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த இந்த அறிவிப்பினால் அவர் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலும் உள்ளதாக அவதானிகளால் தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்...