Main Menu

கதிர்காம பாதயாத்திரைக்கு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

கதிர்காமத்துக்கான பாதயாத்திரைக்கு அனுமதியளிக்குமாறு ஜனாதிபதியிடம் மட்டக்களப்பு மாமாங்கம் பிள்ளையார் ஆலய பாதயாத்திரை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாமாங்க ஆலய வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்கள், “வருடாவருடம் கதிர்காமத்துக்கான பாதயாத்திரையை மேற்கொண்டு வருகின்றோம். இந்த யாத்திரை பாரம்பரியது. யாத்திரையால் சமூக நல்லிணக்கத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

இயற்கையோடு பயணிக்கும் இந்த யாத்திரை உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமிக்கது. இந்த யாத்திரையின் பயனாக பல நேர்த்திக் கடன்கள் நிறைவேறியும் நோய்கள் குணமாகியும் உள்ளன.

நாடு தற்போது சுமூக நிலைக்கு வந்துள்ளது. எனவே சுகாதார பணிமனைகள் எங்களுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்கினால் சமூக இடைவெளியைப் பேணி நாங்கள் யாத்திரையை முன்னெடுத்துச் செல்ல இயலும்.

எனவே, இந்த வருடம் பாதயாத்திரை மேற்கொள்ளவுள்ள அடியாராகிய நாங்கள் தயார் நிலையிலுள்ளோம். இருந்தபோதும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக யாத்திரை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்குமா? என்ற நிலையிலுள்ளோம்.

இந்த யாத்திரைப் பயணம் தடைப்படுமாயின் யாத்திரைகளாகிய எங்களுக்கு உளவியல் ரீதியான மன பின்னடைவு ஏற்படும். இருந்தாலும் இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம் எனவே இந்த பாதையாத்திரைக்கு ஜனாதிபதி அனுமதியளிக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்” என தெரிவித்தனர்.

பகிரவும்...