Main Menu

கணினி இணைய ஊடுருவிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முதன் முறையாக தடை விதிப்பு!

முதன் முறையாக, சீனா, ரஷ்யா, வட கொரியாவைச் சேர்ந்த கணினி இணைய ஊடுருவிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

இணையதளம் மூலம் ஊடுருவி, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட ஆறு பேர் மற்றும் மூன்று குழுக்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் இனி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வர முடியாது. அவர்களுக்கோ, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கோ உறுப்பு நாடுகளில் சொத்துகள் இருந்தால், அவை முடக்கப்படும்.

மேலும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிட்ட நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் பணப் பரிமாற்றம் செய்ய முடியாது.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை பிரிவு தலைவர் ஜோசப் போரல் கூறுகையில், “நெதர்லாந்தைச் சேர்ந்த, இரசாயன ஆயுத தடுப்பு குழு, மேற்காசிய நாடான சிரியா, இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகிறதா என ஆராய்ந்து வந்தது. இக்குழுவின், கணினி வலையமைப்பில் ரஷ்யாவின் ஜி.ஆர்.யு., அமைப்பைச் சேர்ந்த இணைய ஊடுருவிகள் புகுந்து தகவல்களை திருட முயன்றனர். அதை நெதர்லாந்து முறியடித்தது.

இந்த ஜி.ஆர்.யு., அமைப்பு, உக்ரேனுடன் வர்த்தகம் புரியும் நிறுவனங்களின் கணினிகளுக்கு, ‘நாட்பெட்யா’ என்ற வைரசை அனுப்பி, கணினிகளை முடக்கியது. இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. உக்ரேன் மின் ‘கிரிட்’களும், மின் வினியோகம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டன. இதேபோல, சீனாவைச் சேர்ந்த நான்கு பேர், பல நாடுகளில், நிறுவனங்களின் தகவல்களை திருடி, பெரும் இழப்பை ஏற்படுத்தினர்.

அவர்களில், ஜங் சிலாங் என்பவர், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவரை பணிக்கு அமர்த்திய சீனாவின், ‘ஹூவாயிங் ஹைடைய்’ நிறுவனம் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவின், ‘சோசன் எக்ஸ்போ’ நிறுவனம், ‘வானாக்ரை’ என்ற வைரஸ் மூலம், ‘சோனி பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தகவல்களை திருடியது.

அத்துடன், வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் வங்கிகளின் கணினிகளில் நாசவேலைகளை செய்து, கொள்ளைக்கு துணை புரிந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள அவற்றின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

பகிரவும்...