Main Menu

ஒக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் – சர்வதேச நாடுகள் நம்பிக்கை

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ள நிலையில், அதில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த தகவல் சர்வதேச நாடுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உருவாகி உலக நாடுகளை நிலைகுலைய வைத்துள்ள கொரோனா வைரஸால் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 6 இலட்சத்தை அண்மிக்கிறது.

எனினும் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 100க்கும் மேற்பட்ட தடுப்பூசி மற்றும் மருந்துகள் பரிசோதனைகளில் உள்ளபோதிலும் கொரோனாவை குணப்படுத்துவதற்கு இதுவரை சரியான மருந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வரும் தடுப்பூசியில் ஏனைய நாடுகளின் கண்டுபிடிப்புகளைவிட பல்வேறு சிறந்த அம்சங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் கிடைத்த முடிவுகளின்படி, இந்த தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்றும் முதலாவதாக இந்த ஊசியை செலுத்தும் நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்பதுடன், இரண்டாவதாக மனித உடலில் வைரசை உருவாக்கும் ‘செல்’களை அழிக்கும் இந்த வைரஸ் அழிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

மேலும் ‘கில்லர் டி செல்’ என்ற செல்லும் இதில் உள்ளதாக தி டெய்லி டெலிகிராப் என்ற பிரித்தானிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்தும் நபருக்கு ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். ஆனால் கில்லர் டி செல் என்பது அவரது உடலில் பல ஆண்டுகள் தொடர்ந்து இருக்கும் என்பது மிகவும் சாதகமான அம்சம். இந்த தடுப்பூசி குறித்து இன்னும் பல நீண்ட ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் தற்போதைக்கு இந்த ஆராய்ச்சி சரியான திசையில் செல்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்க அனுமதியளித்த ஆராய்ச்சி நெறிமுறை குழு தலைவர் டேவிட் கார்பென்டர் ”இந்த தடுப்பூசி எப்போது தயாராகும் என்பதை உறுதியாக கூற முடியாது. சில நேரங்களில் ஆராய்ச்சியின் முடிவுகள் தவறாகக்கூட போகலாம். இருந்தாலும் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதால் எதிர்வரும் செப்டம்பரில் இந்த ஊசி பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலையின் இந்த அறிவிப்பு கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுமா என ஏக்கத்துடன் காத்திருக்கும் சர்வதேச சமுதாயத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என தி டெய்லி டெலிகிராப் என்ற பிரித்தானிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பகிரவும்...