Main Menu

ஐ.நா.விடம் புதிய கோரிக்கையை முன் வைத்தார் சிறீதரன்

இலங்கை அரசாங்கத்தினை வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றினுள் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் சிவஞானம் சிறீதரன் கூறியுள்ளதாவது, “தமிழர்களாகிய நாங்கள் இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னர், கடந்த பத்து ஆண்டுகளாக நீதியை எதிர்பார்த்து போராடிக்கொண்டிருக்கின்றோம் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

பாதிக்கப்பட்ட தரப்பான நாம் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்ட பொறிமுறைகளின் ஊடாக நீதியான விசாரணை நடைபெறும் என்று பெரு நம்பிக்கை கொண்டிருந்தோம்.

உள்நாட்டில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் உள்ளிட்ட முன்னேற்றகரமான விடயங்கள் நடைமுறைச்சாத்தியமாகும் என்று எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 30.1 பிரேரணை தீர்மானமாக  நிறைவேற்றப்பட்டு, அதில் முன்மொழியப்பட்ட விடயங்களை  இலங்கை அரசாங்கம் தனது ‘இறைமையை’ காரணம் காட்டி நிராகரித்து விட்டது.

இதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்கள் எதிர்பார்த்த பொறுப்புக்கூறும் செயன்முறை தேக்க நிலையிலேயே உள்ளது.

வடக்கு கிழக்கினை பூர்வீக தாயகமாக கொண்ட தமிழினம், சிங்கள இனத்தின் பூர்வீகத்தினை விடவும் நெடிய வரலாற்றைக் கொண்டது. அத்துடன் தமிழினம் தனித்துவ கலாசார, பண்பாடுகளையும், இறைமையையும் கொண்டதாகும். அத்தகைய மூத்த பூர்வீக இறைமையைக் கொண்ட தமிழினம் இன்றும் தேற்றுவாரற்று, நீதியற்று கையறுநிலையில் இருக்கிறது.

2010ல் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூனுக்கு இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதி, இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட கற்றுத்தந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்ட மக்ஸ்வெல்  பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30.1, 34.1, 40.1 தீர்மானங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் தற்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் புதிய அரசியல் சாசன உருவாக்கம் மற்றும் இதர சில பொருளாதார விடயங்களை மையப்படுத்தி உள்ளகத்தில் தமிழர்கள் உட்பட சிறுபான்மை தேசிய இனங்களை அடிமைப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கும் ஏககாலத்தில் சர்வதேசத்திற்கு அவை குறித்து வேறொரு பிம்பத்தை காண்பிப்பதற்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்பதை தாங்கள் அறியாதவர் அல்லர்.

இந்நிலையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் சபையினால் மட்டுமே முடியும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களினதும் ஏகோபித்த நம்பிக்கை ஆகும்.

அதனடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் பொறுப்புக்கூறலை மறுதலித்து வரும் இலங்கை அரசாங்கம் தொடர்பில் புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிஸ் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹல்டன் ஆகியோர் திடமாக தெரிவித்துள்ளனர்.

அந்தக் கூற்றுக்கள் எமக்கு நம்பிக்கை அளிக்கும் அதேசமயம் தாங்கள் இலங்கையின் சமகால நிலைமைகளையும் இனவழிப்பின் நேரடிச் சாட்சியங்களையும் நேரடியாக கண்டிருப்பவர் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினை வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றினுள் வைத்திருப்பதற்கான அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று விநயமாக கேட்டுக் கொள்கின்றேன்.

அதுமட்டுமன்றி, கடந்த ஐ.நா.தீர்மானங்களின்போது பாதிக்கப்பட்ட தரப்பாக இருக்கும் தமிழினம் என்பது தெளிவாக குறிப்பிடப்படாத நிலைமையொன்று காணப்படுகின்றது. அவ்விதமான மயக்க நிலைமைகளைத் தவிர்க்கும் வகையில் புதிதாக அமையும் பிரேரணை காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கும் எனது மக்களுக்கும் அதீதமாக உள்ளது.

அந்த விடயம் குறித்து தாங்கள் கரிசனை செலுத்துவீர்கள் என்ற  நம்பிக்கையுடன் சாத்தியமான நீதிப் பொறிமுறை ஒன்றினூடாக ஐக்கிய நாடுகள் சபையும், அதன் உறுப்பு நாடுகளும் அதியுச்ச அழுத்தத்தை இலங்கைக்கு கொடுப்பதன் மூலம் மட்டுமே நீதி, நியாயம் உள்ளிட்டவை நிலைநாட்டப்படும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

எனது மக்கள் சார்ந்து முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பாக மிகக்கூடிய கரிசனையை செலுத்துவீர்கள் என்ற பெரும் நம்பிக்கையுடன் இக்கடிதத்தை சமர்ப்பிக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...