Main Menu

ஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோல்வி அடைந்தால் பாரதூரமான விளைவுகளை நாடு சந்திக்க நேரிடும்- சம்பிக்க

ஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால் எமது நாடு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்  சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், இராஜதந்திர ரீதியான நெருக்கடிகளும் எமது யோசனைகளும்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து  தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில்  சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் இலங்கை மீண்டுமொருமுறை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டிருக்கிறது.

இலங்கை அதில் வெற்றியடையுமா? அல்லது தோல்வியடையுமா? என்பது குறித்து இப்போது உறுதியாகக் கூறமுடியாது. எனினும் இதனைத் தொடர்ந்து எமது நாடு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது மாத்திரம் தெளிவாக தெரிகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட போரின் போது, இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என்ற அடிப்படையிலேயே தற்போதைய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.முன்னரும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. அதில் நாம் தோல்வியடைந்தோம்.

அதனைத்தொடர்ந்து ஜீ.எஸ்.பி வரிச்சலுகை நிறுத்தப்பட்டது. அதன் விளைவாக அதனை மையப்படுத்திய பொருளாதார நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்தன. மீண்டும் அதேபோன்றதொரு நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்கியதுடன், அந்தத் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதன் ஊடாக மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகையைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனை மீதான வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால், மீண்டும் அத்தகைய அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடுமா என்ற கேள்வி இருப்பதுடன் அது நாட்டு மக்கள் அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...