Main Menu

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதி மன்றத்தில் கடந்த 2018-ல் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை, தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார். குறிப்பாக ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசி பாளையம் நான்கு வழிச் சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்த நிலையில், அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த பணிக்கான ஒப்பந்தம், முதல்வரின் உறவினர் ராமலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லை-செங்கோட்டை -கொல்லம் நான்கு வழிச் சாலையை விரிவுப்படுத்தி, பலப்படுத்த ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம் ‘வெங்கடாஜலபதி அண்ட் கோ’ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், சேகர்ரெட்டி, நாகராஜன், பி.சுப்பிரமணியம் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மூலம், ரூ.200 கோடி மதிப்பில், மதுரை ரிங் ரோடு பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.

பகிரவும்...