Main Menu

ஊழல் குற்றச்சாட்டு – கிர்கிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி கைது

ஊழல் மற்றும் பதவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கிர்கிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அல்மாஸ்பெக் அடம்பயேவ் பாதுகாப்புப் படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியை சட்டத்தின் முன் நிறுத்தும் நோக்கில் அவரை கைது செய்யும் நடவடிக்கை நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதியின் வீடு நோக்கி விரைந்த அந்நாட்டின் தேசிய படையினர் அவருடன் தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் சோதனை மேற்கொண்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டாதாக கிர்கிஸ்தான் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் தலைநகருக்கு அருகே உள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கிர்கிஸ்தான் தேசிய இராணுவத்திற்கும் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது தேசிய இராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 6 பேர் முன்னாள் ஜனாதிபதி ஆதரவாளரினால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், இந்த நடவடிக்கையின்போது முன்னாள் ஜனாதிபதி அல்மாஸ்பெக் சரணடைந்ததாகவும் பின்னர் அவர் தலைநகரான பிஷ்கெக்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சில அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...