போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானின் 7 நிபந்தனைகள்
தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க, ஈரான் கட்டார் வழியாக அமெரிக்காவிடம் ஏழு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கோரிக்கைகளை நிராகரித்தால், “தீர்க்கமான போரை” எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஈரானிய இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், வொஷிங்டனிடம் எங்கள் நிபந்தனைகளைத் தெரிவித்துள்ள மத்தியஸ்த நாடான கட்டாருடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்; ஜனாதிபதி ட்ரம்ப்பின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்,” என்று ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாயி கூறியதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
ரெஸாயி அந்த ஏழு நிபந்தனைகளையும் பகிரங்கமாகத் தெளிவாகக் குறிப்பிடவில்லை.
இருப்பினும், போர் முடிவுக்கு வர ஈரான் நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்பிய மூன்று கோரிக்கைகளை அவர் தனித்தனியாகச் சுட்டிக்காட்டினார்.
அனைத்து முனைகளிலும் சண்டையை நிறுத்துதல், முடக்கிவைக்கப்பட்டுள்ள ஈரானிய நிதியை விடுவித்தல் மற்றும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவை அவை.
“இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது வொஷிங்டனின் நலனுக்கு உகந்தது. ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்கள் எந்தப் பலனையும் அளிக்காது. நாங்கள் ஒரு தீர்க்கமான போருக்குத் தயாராக இருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.
ஈரானிய இராணுவ மதிப்பீடுகளின் அடிப்படையில் மற்றொரு அமெரிக்கத் தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ரெஸாயி மேலும் கூறினார்.
அதே சமயம், “இந்தப் போரை கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும்” ஒரு உத்தியை தெஹ்ரான் பின்பற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முந்தைய கட்ட சண்டைகளுக்குப் பின்னர் தெஹ்ரான் தனது இராணுவத் திட்டமிடலை மாற்றியதாகவும், தற்போது பாரசீக வளைகுடாவிலிருந்து ஓமான் வளைகுடா வழியாக அரபிக் கடல் வரை செயல்படும் அமெரிக்கக் கடற்படை சொத்துக்கள் மீது கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.
தெஹ்ரான் டைம்ஸ் பத்திரிகையின்படி, ஈரான் அண்மையில் ஒரு அமெரிக்கக் கப்பல் அல்லது விமானம் தாங்கி கப்பலுக்கு அருகில் பல முனைகள் கொண்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை சோதித்ததாகவும் ரெஸாயி கூறினார்.
வொஷிங்டன் மற்றொரு தாக்குதலை நடத்தினால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் அங்கு செயல்படும் அமெரிக்க வணிக நலன்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
