Main Menu

உலக சுகாதார அமைப்புக்குச் செலுத்த வேண்டிய நிதி நிலுவையை இரத்து செய்தது அமெரிக்கா!

ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்புக்குச் செலுத்த வேண்டிய நிதி நிலுவைத் தொகையை இரத்து செய்வதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்க செலுத்த வேண்டிய 12 கோடி டொலரில் 5.2 கோடி டொலர் ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டுக்குள் அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா படிப்படியாக விலகும் திட்டத்தின் ஒரு பகுதியாக, எஞ்சியுள்ள சுமார் 6.8 கோடி டொலரை செலுத்தத் தேவையில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், உலக சுகாதார அமைப்பின் கொவிட்-19 தடுப்பூசி சர்வதேச ஒத்துழைப்பு திட்டத்தில் இணையப் போவதில்லை என்று அறிவித்திருந்தாலும், அந்த அமைப்பு செயற்படுத்தும் அமெரிக்க அரசின் போலியோ சொட்டு மருந்து வினியோகம் போன்ற திட்டங்களில் தொடர்ந்து பங்கேற்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று விவகாரத்தில் சீனாவைப் பொறுப்பாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் தோல்வியடைந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், அந்த அமைப்புடனான அமெரிக்காவின் உறவைத் துண்டிப்பதாகக் கடந்த மே மாதமே அறிவித்தார்.

அமெரிக்காவின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகள் கேட்டுக்கொண்டபோதும், உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி உலகளாவிய பொதுச் சுகாதார தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று ட்ரம்ப் கூறினார்.

இந்தநிலையில், உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்காவின் உறவை முடித்துக் கொள்வதாக, கடந்த ஜூலை மாதம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

பகிரவும்...