Main Menu

உலகில் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதி : ஐக்கிய நாடுகள் சபை

கடந்த ஆண்டில் மாத்திரம் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட இந்த தொகை 10 மில்லியன் அதிகமாகும்.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, வறுமைக் கோட்டின் கீழ் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாக குறைந்து வந்த அந்த எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் அதிகரிக்கத் தொடங்கியது.

பருவநிலை மாற்றமும் புதிதாக ஏற்பட்ட போர் சூழ்நிலைகளும் அதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. உலகில் சுமார் 149 மில்லியன் குழந்தைகள் ஊட்டச் சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்று தெரிவித்தது.

அதேவேளையில், உலகின் பல பகுதிகளிலும் உடற்பருமனாலும், கூடுதல் எடையாலும் எல்லா வயதுப் பிரிவினரும் பாதிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் யாருமே பசியால் அவதிப்படக்கூடாது எனும் இலக்கை எட்டுவது சிரமமான விடயம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வௌியிட்டுள்ளது.

பசியையும், உணவுப் பொருள் மீதான கட்டுப்பாட்டையும் ஆயுதமாகப் பயன்படுத்தி, பயங்கரவாதக் குழுக்கள் சமூகங்களைப் பிளவுபடுத்துவதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு இல்லாமல், ஒருபோதும் அமைதியும் சமூக உறுதிப்பாடும் சாத்தியப்படாது என்று ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பகிரவும்...