Main Menu

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சண்முகம் பதில் அளித்துள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

மு.க.ஸ்டாலின்: நேற்று பாராளுமன்றத்தில் கனிமொழி உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டில் புதியதாக மீத்தேன் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. 7 ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில் 2 திட்டங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று பதில் அளித்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அனுமதிக்கப்படாது என்று ஏற்கனவே அமைச்சர் இங்கு அறிவித்திருக்கிறார்.

தமிழக அரசு புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. இதுபற்றி ஒரு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்களுக்கும், அரசு சார்பில் அறிக்கை அனுப்ப வேண்டும். கொள்கை முடிவு எடுத்து அறிவித்தால் தான் தமிழக மக்கள் நிம்மதி அடைவார்கள்.

நேற்று டெல்டா விவசாயிகள் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்திருக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த கூட்டத் தொடரிலேயே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஒப்பந்தம் போட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஒப்பந்தம் போடலாம். ஆனால் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் நமது மாநிலத்தில் செயல்படுத்த முடியாது என்பது தான் விதி. அவர்கள் விண்ணப்பங்கள் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

மறைந்த முதல்-அமைச்சர் அம்மா இருக்கும்போதே இதுபோன்று ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அம்மாவின் வழி நடக்கும் இந்த அரசு விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்காது. முதல்-அமைச்சருடன் கலந்து பேசி வல்லுநர் குழு அமைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது. இல்லாத ஒரு விசயத்துக்கு ஜெயிலுக்கு போவோம் என்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்.

மு.க.ஸ்டாலின்: விவசாயிகள் நலனுக்காக போராடுபவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம். ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என்பதை கொள்கை முடிவு எடுத்து அறிவித்தால் விவசாயிகள் நிம்மதி அடைவார்கள்.

அமைச்சர் சண்முகம்: மத்திய அரசு ஒப்பந்தம் போட்டாலும் தமிழக அரசு அனுமதிக்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாது. நாங்கள் அனுமதி அளிக்கவே மாட்டோம். இல்லாத ஒரு வி‌ஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம். எந்த வழியில் வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தும் உரிமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே இந்த திட்டம் தமிழகத்துக்கு வராது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

பகிரவும்...