Main Menu

உடல்நலக் குறைவு காரணமாக சவூதி அரேபிய மன்னர் வைத்தியசாலையில் அனுமதி

சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சவூதி அரேபிய அரசின் அதிகாரபூர்வ செய்தி முகமை ஸ்பா தெரிவித்துள்ளது.

84 வயதாகும் மன்னர் சல்மான் பித்தப்பை வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சில பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தலைநகர் ரியாத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து, மன்னர் சல்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமியின் சவூதி அரேபிய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் இன்று அறிவித்துள்ளார் என ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரியாத் பிராந்தியத்தின் ஆளுநராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய சல்மான், மன்னராக முடிசூடுவதற்கு முன்பு இரண்டரை ஆண்டுகள் பட்டத்து இளவரசராகவும் 2012 ஆம் ஆண்டு முதல் துணை பிரதமராகவும் பணியாற்றியவர்.

அதன் பின்னர்  சவூதி அரேபியாவின் மன்னராக கடந்த 2015ஆம் ஆண்டு சல்மான் பொறுப்பேற்றார்.

கிட்டத்தட்ட 5 தசாப்தங்களாக ரியாத் பிராந்தியத்தின் ஆளுநராக அவர் செயல்பட்டுள்ளார். இவரது நிர்வாக காலத்தின் கீழ் சுமார் 2 இலட்சம் பேர் வாழ்ந்து வந்த சிறு நகரம் தற்போது 50 இலட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கக் கூடிய பகுதியாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...