Main Menu

உக்ரைன், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இடையே கைதிகள் பரிமாற்றம் ஆரம்பம்!

உக்ரைனுக்கும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,  ‘உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தரப்பில் கைது செய்யப்பட்டிருந்தவர்களை விடுவிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன.

டொனட்ஸ்க் பகுதியில், ஹார்லிவ்கா நகருக்கு அருகே உள்ள மேயர்ஸ்கி சோதனைச் சாவடியில் கைதிகள் பரிமாற்றம் நடைபெறுகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இரு தரப்பிலும் எத்தனை கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள் என்ற விபரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

முன்னதாக, தங்கள் தரப்பிலிருந்து 55 உக்ரைன் படையினர் விடுவிக்கப்படவிருப்பதாகவும், அதற்குப் பதிலாக 87 ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களை உக்ரைன் அரசு விடுவிக்கும் எனவும் பிரதிநிதி டாரியா மோரஸோவா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு உக்ரைனில் கடந்த ஐந்தரை வருடங்களாக இடம்பெற்று வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளுக்கு இடையில் கடந்த 9ஆம் திகதி பரிஸில் இடம்பெற்ற முதலாவது நேரடிப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும்...