Main Menu

உக்ரைனை தொடர்ந்து சுவீடனும் நேட்டோவில் இணைய துருக்கி அதிபர் ஆதரவு

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதில் இருந்து அண்டை நாடுகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுவதில் கவனம் செலுத்தி வருகின்றன. உக்ரைன் நேட்டோ படையில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டதால்தான், ரஷியா போர் தொடுக்க முக்கிய காரணம் என சொல்லப்பட்டது. இருந்தாலும் ரஷியாவுக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட்டு வரும் உக்ரைன், நேட்டோ படையில் இணைவதற்கான மற்ற நாடுகளின் ஆதரவுகளை கோரி வருகிறது. கடந்த வாரம் துருக்கி சென்ற அவர், அந்நாட்டு அதிபர் எர்டோகனை சந்தித்தார். அப்போது, உக்ரைன் நேட்டோ படையில் இணைய எர்டோகன் ஆதரவு அளித்தார். இதற்கிடையே சுவீடன் நேட்டோவில் இணைய விண்ணப்பித்திருந்த நிலையில், துருக்கி தொடர்ந்து தடையை ஏற்படுத்தி வந்தது. குர்திஷ் குழு, துருக்கி அரசுக்கு எதிரான ஆர்வலர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதால், துருக்கி தடையை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் நேற்று துருக்கி அதிபர் எர்டோகன், சுவீடன் நேட்டோ படையில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார். இருந்தாலும், துருக்கி நாடாளுமன்றத்தில் ஆதரவு பெற வேண்டும். அதற்கான அழுத்தத்தை கொடுப்பதாக எர்டோகன் உறுதி அளித்துள்ளார். துருக்கி அதிபர் எர்டோகன், சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்சன், நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்திப்பிற்கு பிறகு இந்த முடிவை துருக்கி எடுத்துள்ளது. துருக்கியின் இந்த முடிவை வரலாற்று நாள் என ஜோன்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். மேலும், ”சுவீடன் இணைவது, நேட்டோ கூட்டணி நாடுகளின் பாதுகாப்பிற்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பயனளிக்கும். இது பாதுகாப்பு மற்றும் வலிமையை ஏற்படுத்தும்” என்றார். சுவீடன் 32-வது நாடாக நேட்டோவில் இணைகிறது.

பகிரவும்...