Main Menu

உக்ரைனில் ரயில் நிலையம் மீதான ரொக்கெட் தாக்குதலில் குறைந்தது 50பேர் உயிரிழப்பு!

கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 50பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட இத்தாக்குதலில் முந்ததைய உயிரிழப்பு எண்ணிக்கை 39 என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளதாக டொனெட்ஸ்க் ஆளுனர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென உக்ரைனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக உக்ரைன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தை இரண்டு ரொக்கெட்டுகள் தாக்கின. ரயில்வேயின் பயணிகள் உட்கட்டமைப்பு மற்றும் கிராமடோர்ஸ்க் குடியிருப்பாளர்கள் மீதான வேண்டுமென்றே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறும் முயற்சியில் பொதுமக்கள் நிலையத்தில் இருந்த நிலையில், இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த தாக்குதலை தாம் நடத்தவில்லை என ரஷ்யா மறுத்துள்ளது.

இந்த ரயில் நிலையத்தை தாக்கிய ஏவுகணை சிதைவுகள் காட்டும் டாச்கா-யு கணைகள் உக்ரைன் ஆயுதப்படைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறவை என ரஷ்யா கூறுகின்றது.

பகிரவும்...