Main Menu

இலங்கை கிரிக்கெட் வீரர்களை இந்தியா மிரட்டியதாக குற்றச்சாட்டு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விளையாட மறுப்பு தெரிவித்ததற்கு, இந்தியா மிரட்டியதே காரணம் என பாகிஸ்தான் அமைச்சர் ஹம்சா அமீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பத்து வீரர்கள், பாகிஸ்தான் அணியுடனான தொடரை புறக்கணித்துள்ளனர்.

இரு அணிகளுக்கிடையிலான இத்தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றால், பாகிஸ்தான் மீதான தீவிரவாத அச்சம் துடைக்கப்படும், மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட் புத்துயிர் பெறும் என எதிர்பார்த்துக் காத்திருந்த பாகிஸ்தானியர்களுக்கு இலங்கை வீரர்களின் புறக்கணிப்பு பேரிடியாக தலையில் வீழ்ந்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஹம்சா அமீர் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘பாகிஸ்தான் சென்று விளையாடினால் ஐ.பி.எல்., தொடரில் விளையாட அனுமதிக்க முடியாது என இலங்கை வீரர்களை இந்தியா மிரட்டி இருக்கும். அதனால் தான் அவர்கள் பாகிஸ்தான் வர மறுக்கின்றனர்’ என கூறியுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஆறு பாகிஸ்தான் பொலிஸார் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதனால், பாகிஸ்தானிற்கு சென்று விளையாட சர்வதேச அணிகள் தயக்கம் காட்டின. ஆனாலும் கடும் முயற்சிகளை மேற்கொண்ட பாகிஸ்தான், 2015ஆம் ஆண்டு சிம்பாப்வேயை பாகிஸ்தான் வரவழைத்து கிரிக்கெட் தொடரிலும் விளையாடி, வீரர்களுக்கு பணப்பரிசினையும் பரிசளித்தது.

இதன்பிறகு, 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் நிலை இலங்கை அணி பாகிஸ்தானில் ஒரேயொரு ரி-20 போட்டியில் விளையாடியது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.சி.சி. உலக பதினொருவர் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகளும் பாகிஸ்தானில் குறுகிய கால ரி-20 சர்வதேச தொடர்களில் விளையாடின.

இவ்வாறான கடுமையான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்ட போதும், பாகிஸ்தான் மீது நம்பிக்கையில்லாத சர்வதேச அணிகள், அங்கு சென்று விளையாட, தொடர்ந்தும் தயக்கம் காட்டுகின்றன.

ஆனால், உலகளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தானுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு முதன்மை இலங்கை அணி, செப்டம்பர் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலும் விளையாட இருந்தது.

இந்த நிலையிலேயே இலங்கை அணியின் முன்னணி வீரர்களான திமுத் கருணாரத்ன, நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, அகில தனன்ஜய, லசித் மாலிங்க, அஞ்செலோ மெதியூஸ், சுரங்க லக்மால், தினேஷ் சந்திமால் ஆகியோர் பாகிஸ்தான் அணியுடனான தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...