Main Menu

இலங்கையில் 8வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று!

இலங்கையில் 8வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று சனிக்கிழமை (16) நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் கடந்த 13ம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், 48 மணித்தியால அமைதியான காலத்தின் பின்னர் இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கிறது. மாலை 5 மணிவரை வாக்களிப்பு இடம்பெறும்.

அடுத்த 5 ஆண்டுகளில் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் இது. அபிவிருத்தியையும், அபிவிருத்தியுடன் கூடிய ஜனநாயக உரிமைகளையும் முன்னிறுத்தி இரண்டு பிரதான வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு தோ்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி ஜனாயக தேசிய முன்னணியின் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேன இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. தனது பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்த நிறைவேற்றதிகார ஜனாதிபதியொருவர், இரண்டாவது தடவையும் தேர்தலில் போட்டியிடாத முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

மைத்திரியின் வெற்றியின் பின்னர் சு.க மற்றும் ஐ.தே.க இணைந்து நல்லாட்சி அரசை உருவாக்கிய பின்னர், தனித்து சென்ற மஹிந்த அணி உருவாக்கிய பொதுஜன பெரமுன இப்பொழுது விஸ்பரூம் எடுத்துள்ளது. அந்த அணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச (70) களமிறக்கப்பட்டுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணி சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச (52) களமிறக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திசநாயக்க (50), முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க, எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். மொத்தமாக 35 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், சஜித், கோட்டா ஆகியோரே இறுதிச்சுற்றிற்கு வரும் வேட்பாளர்களாவர்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால் 35அடி நீளமான வாக்குச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், பதவியில் இருக்கும் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது எதிா்க்கட்சித் தலைவரோ போட்டியிடாத முதல் ஜனாதிபதி தோ்தல் இது என்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

இந்த தேர்தலில் 1கோடியே 59 இலட்சத்து 92ஆயிரத்து 96 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். 12 ஆயிரத்து 815 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 5 மணிவரை வாக்களிக்க முடியும்.

தேசிய அடையாள அட்டை அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையை வாக்களிப்பிற்காக பயன்படுத்த முடியும்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தமது பெயர், வாக்காளர் பெயர் பட்டியலில் இருக்குமாயின் அவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தேர்தல் கண்காணிப்புப் பணியில் இணைந்து கொண்டுள்ளனர். தென்னாபிரிக்க மனித உரிமைகள் அமைப்பு, இந்தோனேசியா, இந்தியா, மாலைதீவு, பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய அமைப்புக்களைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் கண்காணிப்புப் பணியில் இணைந்து கொண்டுள்ளனர்.

வழக்கம் போல் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும். முதலாவது முடிவு இன்று நள்ளிரவின் பின்னர் வெளியாகும். எனினும், உத்தியோகபூர்வ முடிவு நாளை மறுநாள் திங்கட்கிழமைதான் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

யாருக்கு வெற்றி வாய்ப்பு?

இந்த தோ்தலில், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளா் சஜித் பிரேமதாசாவுக்கும், பொதுஜன பெரமுனா வேட்பாளா் கோட்டாபய ராஜபக்சவுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது.

சஜித் பிரேமதாச

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச, ஏழைகளின் பங்காளன் என்று பெயா் பெற்றவா். ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக இருந்தவர். வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அடித்தட்டு மக்களிற்காக ஏற்படுத்தியவர். இன்றும் அவர் மீதான கவர்ச்சி சமூகத்தில் உள்ளது. அந்தக் கவா்ச்சிதான், சஜித் பிரேமதாசாவின் மிகப்பெரிய பலம்.

அதுதவிர, அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இயல்பு, ஊழல் மற்றும் குற்றச்சாட்டுக்களின்மை, சிறுபான்மையினரின் ஆதரவும் சஜித்தின் பலங்கள்.

பலவீனம்: தற்போதைய அரசியல் இருந்தபடியே தேர்தலை எதிர்கொள்வது சஜித்திற்கு பலவீனமாக அம்சமாக உள்ளது. அரசாங்கத்தின் குறைகள் மீதான அதிருப்தி, சஜித்தின் மீதும் ஏற்படவே செய்யும்.

கோட்டாபய ராஜபக்ச

பலம்: யுத்தத்தை முடித்தவர் என தீவிர எண்ணமுடைய சிங்கள வாக்காளா்கள் மத்தியிலுள்ள கவர்ச்சி. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அவருக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள கடும்போக்குவாதம், தேசிய பாதுகாப்பு என்ற இரட்டை குதிரை பூட்டிய வண்டியிலேயே அவர் பயணம் செய்கிறார். இதனால் சிறுபான்மையினர் மத்தியில் அவரால் நுழைய முடியவில்லை. வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக கருதப்பட்ட சு.கவின் ஆதரவு, குடும்ப உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு, நகர அபிவிருத்தி அமைச்சின் மூலம் கொழும்பை அபிவிருத்தி செய்தேன் என அவர் உருவாக்கியுள்ள பிம்பம் ஆகியன உதவக்கூடும்.

பலவீனம்: ராஜபக்ச குடும்பம் என்றாலே பலருக்கு உதறல் எடுக்கும். மூச்சுக்காட்டினாலே வெள்ளை வாகனம் வரும் என்ற நிலைமை முன்னைய அவர்களது ஆட்சிக்காலத்தில் நிலவியது. அந்த கலாச்சாரத்தின் பின்னணியில் கோட்டாபயவே இருந்தார் என்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளது. 300 தமிழர்களை பிடித்து முதலைக்கு போட்டதாக அண்மையிலும் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். அதுதவிர, குடும்ப ஆட்சி, ஜனநாயக விழுமியங்களை கடைப்பிடிக்காமை, யாரும் கேள்வி கேட்க அனுமதிக்கப்படாமை, வழமையான செயற்பாடுகளை மேற்கொள்ள தடையேற்படுத்தும் பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொண்டமை, சிறுபான்மையினரின் ஆதரவு பெருமளவிற்கு இல்லாமை, சர்வதேச சமூகத்தின் ஆதரவு இல்லாமை, சர்வதேச ஆதரவின்றி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இலங்கையில் அரசியல், பொருளாதார குழப்பங்கள் வரலாமென்ற மக்களின் அச்சம் என பல பலவீனங்கள் உள்ளன. இம்முறை வேட்பாளர்களில் அதிக பலமும், அதிக பலவீனமும் உள்ள வேட்பாளர் இவர்தான்..

அனுரகுமார திசநாயக்க

பலம்: இலங்கை அரசியலில் மூன்றாவது சக்தியான ஜேவிபி, மாற்றத்தை விரும்புபவர்களின் முதல் தெரிவாக உள்ளது. இடதுசாரித்தவ சாயல்களுடன் அரசியல், பொருளாதார, நிர்வாக விடயங்களில் மாற்றம் பற்றி அநுர பேசி வருவது மிகக்கவர்ச்சியாக உள்ளது என்ற அப்பிராயம் பரவலாக உள்ளது. இதனால், சுமார் 5 இலட்சமாக இருந்த அவர்களின் வாக்கு வங்கியை இம்முறை 7-9 இலட்சங்களாக உயர்த்திக் கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலவீனம்: ஆட்சியை பிடிக்கும் பலமுள்ள சக்தியாக இன்னும் ஜேவிபி உருவாகவில்லை. தவிரவும், ஜேவிபி கிளர்ச்சியால், இன்னும் எதிர்மறையான எண்ணங்களுடன் உள்ள சிங்கள வாக்காளர்களும் உண்டு.

மகேஷ் சேனநாயக்க

இடதுசாரிக்கட்சிகள் சிலவற்றின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் குதித்துள்ளார். அந்த கட்சிகள் பெரிய செல்வாக்கானவை அல்ல. மகேஷ் களமிறங்கியுள்ளது, அசைவற்று நீண்டகாலமாக தேங்கியிருந்த அணியில் மெல்லிய சலனத்தை ஏற்படுத்தியுள்ளதே தவிர, அது பேராறாக உருவெடுக்காது.

பிரதான வேட்பாளர்கள் பணத்தை பில்லியன் கணக்கில் தண்ணீராக கொட்ட, மகேஷ் தரப்பு இலட்சங்களில் அளந்து செலவிட்டது. அதனால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முறையாக சென்று சேரவில்லை.

வேட்பாளர்கள்

இம்முறை 35 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். ஆரம்பத்தில் 41 பேர் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும் இறுதியாக 35 பேர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் புதிய ஜனநாயக முன்னணி-சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன- கோத்தாபய ராஜபக்ஷ , தேசிய மக்கள் சக்தி- அநுரகுமார திஸாநாயக்க, ஜாதிக சங்வர்தன பெரமுன – பள்ளெவத்த கமலராளலாகெ றொஹான் பள்ளெவத்த, தேசிய மக்கள் இயக்கம் -ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, ஐக்கிய சோசலிச கட்சி – சிறிதுங்க ஜயசூரிய , நவ சிங்கள உறுமய – சரத் மனமேந்திர, எங்கள் மக்கள் சக்தி கட்சி – வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா, இலங்கை தொழிலாளர் கட்சி- ஏ.எஸ்.பி.லியனகே , முன்னிலை சோசலிச கட்சி- துமிந்த நாகமுவ , இலங்கை சோசலிச கட்சி – கலாநிதி அஜந்த விஜேசிங்க பெரேரா , ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி- ஆரியவங்ச திஸாநாயக்க , சோசலிச சமவுடைமைக் கட்சி – நம்புநாம நாணயக்கார அக்மீமன பள்ளியங்குருகே வஜிரபானி விஜயஸ்ரீவர்தன, நவ சமசமாஜக் கட்சி- பெத்தே கமகே நந்திமித்ர , ஜனநாயக தேசிய முன்னணி – அருண டி சொய்சா, சிங்கள தீப ஜாதிக பெரமுன- ஜயந்த லியனகே , ஜனசத பெரமுன- பத்தரமுல்ல சீலரத்ன தேரர், ருஹுனு ஜனதா பெரமுன கட்சி – அஜந்த டி சொய்சா, ஐக்கிய சோசலிச கட்சி- வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா , மக்கள் அனைவரும் அரசர் – பிரியந்த முனிஹத் எதிரிசிங்க , தேசிய ஐக்கிய முன்னணி – நாமல் ராஜபக் ஷ, எமது தேசிய முன்னணி – சுப்ரமணியம் குணரத்தினம், சுயேட்சை வேட்பாளர் .- வர்ணகுலசூரிய மில்ரோய் சர்ஜியஸ் பெர்ணான்டோ , சுயேட்சை வேட்பாளர் – ஸ்ரீபால அமரசிங்க, சுயேட்சை வேட்பாளர்- சமரவீர வீரவன்னி, சுயேட்சை வேட்பாளர் – பொல்கம்பலராளலாகே சமிந்த அனுருத்த , சுயேட்சை வேட்பாளர்- கெட்டகொட கமகே ஜயந்த பெரேரா , சுயேட்சை வேட்பாளர் – சந்திரசேகர ஹேரத் ஹிட்டிஹாமி கோராளலாகே சமன் ஸ்ரீ ஹேரத், சுயேட்சை சேட்பாளர்- அஷோக வடிகமங்காவ சுயேட்சை வேட்பாளர் -அப்பரெக்கே புஞ்ஞானந்த தேரர், சுயேட்சை வேட்பாளர் – விஜேநாயக்க கங்கானம்கே பியசிறி விஜேநாயக்க , சுயேட்சை வேட்பாளர் – சாந்த குமார ஆனந்த வெல்கம சுயேட்சை வேட்பாளர் – பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, சுயேட்சை வேட்பாளர்- இல்லியாஸ் ஐத்துரோஸ் மொஹமட் , சுயேட்சை வேட்பாளர் – வெலேரா கீர்த்தி ரத்தின முதியன்சேலாகே சரத் விஜித குமார, சுயேட்சை வேட்பாளர் – எம்.கே.சிவாஜிலிங்கம், சுயேட்சை வேட்பாளர் – மஹ்மூத் லெவ்வை ஆலீம் மொஹமட் ஹிஸ்புல்லாஹ் , சுயேட்சை வேட்பாளர்- குணபால திஸ்ஸகுட்டி ஆராச்சி , சுயேட்சை வேட்பாளர்- கனே ஆரதச்சிகே மஹீபால ஹேரத் என வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர்.

மாவட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து 96 பேர் (15,994,096) ஆகும். இவர்களின் எண்ணிக்கை 22 தேர்தல் மாவட்ட அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில்- 1,670,403 வாக்காளர்களும், கம்பஹா மாவட்டத்தில் – 1,751,892 வாக்காளர்களும் , களுத்துறை மாவட்டத்தில்- 955,079 வாக்காளர்களும், கண்டி மாவட்டத்தில் – 1,111,860 வாக்காளர்களும், மாத்தளை மாவட்டத்தில்- 401,496 வாக்காளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் – 569,028 வாக்காளர்களும், காலி மாவட்டத்தில் – 858,749 வாக்காளர்களும், மாத்தறை மாவட்டத்தில் – 652,417 வாக்காளர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் – 485,786 வாக்காளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் – 564,714 வாக்காளர்களும், வன்னி மாவட்டத்தில் – 282,119 வாக்காளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் – 398,301 வாக்காளர்களும், திகாமடுல்லை மாவட்டத்தில் – 503,790 வாக்காளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் – 281,114 வாக்காளர்களும், குருநாகல் மாவட்டத்தில் – 1,331,705 வாக்காளர்களும், புத்தளம் மாவட்டத்தில் – 599,042 வாக்காளர்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் – 682, 450 வாக்காளர்களும், பொலன்னறுவை மாவட்டத்தில் – 326,443 வாக்காளர்களும், பதுளை மாவட்டத்தில் – 657,766 வாக்காளர்களும், மொனராகலை மாவட்டத்தில் – 366,524 வாக்காளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் – 864,978 வாக்காளர்களும், கேகாலை மாவட்டத்தில் – 676,440 வாக்காளர்களும் இம்முறை பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய வாக்காளர்கள்

அத்துடன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 9 49,606 புதிய வாக்காளர்கள் தகுதியாகியுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மொத்தமாக 15,044,490 பேர் வாக்களிக்க தகுதியானார்கள்.

பகிரவும்...