Main Menu

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம்

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது.

73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று காலை நடைபெறவுள்ளன.

‘சவால்களை வெற்றி கொண்ட வளமான நாளையும் சுபீட்சமான தாய்நாடும்” என்ற தொனிப் பொருளில் இம்முறை சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் நடைபெறுவதுடன் நாட்டில் கொரோனா தொற்று நிலைமை காணப்படுவதனால் சுகாதார வழிமுறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு தேசத்தின் அபிமானத்தை காக்கும் வகையில் வழக்கம்போன்று எவ்வித குறைபாடுகளுமின்றி கம்பீரமானதாகவும் எளிமையான முறையிலும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், தேசிய, சர்வதேச இராஜதந்திரிகள் பலரும் கலந்துகொள்ளும் சுதந்திர தின நிகழ்வுகளில் இம்முறை பொதுமக்கள் பங்கேற்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

நிகழ்வுகளில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலை, கலாசார நிகழ்வுகள் ஆகியன இடம்பெறவுள்ளன.

இன்று காலை 8 மணியளவில் ஜனாதிபதியின் வருகையுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதனை தொடர்ந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன் சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் இன்று அதிகாலை முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில், இம்முறை சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றியே சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...