Main Menu

இறுதிகட்ட பேச்சுகள் தோல்வி: பழம்பெரும் சுற்றுலா நிறுவனத்தின் பணிகள் முடக்கம்

தோமஸ் குக் எனப்படும் 178 வருடங்கள் பழைமையான விடுமுறை சுற்றுலா நிறுவனத்தை பாதுகாப்பதற்கான இறுதி நேர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து அந்த நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா ஏற்பாட்டாளரான தோமஸ் குக் நிறுவனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தகத்தை நிறுத்திவிட்டதாக பிரித்தானிய பொது வான்போக்குவரத்து ஆணையம் (CAA) தெரிவித்துள்ளது.

வருடாந்தம் 150,000 க்கும் மேற்பட்ட பிரித்தானிய விடுமுறை சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துக்கு அந்த நிறுவனம் பெரிதும் பங்களிப்பு செலுத்தியுள்ளது.

அந்த மிகப் பெரிய நிறுவனம் செயற்பாடுகளை முடக்கியுள்ளமை மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் என்று தோமஸ் குக் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான பீற்றர் பேங்கோசர் (Peter Fankhauser) தெரிவித்துள்ளார்.

நிறுவனம் ஒரு கட்டாய முடக்கத்திற்கு உட்பட்டதை அடுத்து அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.

அத்துடன் நிறுவனத்தின் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களிடம் பேங்கோசர் மன்னிப்பு கோரியுள்ளார்.

விடுமுறை சுற்றுலா செயற்பாட்டாளரான தோமஸ் குக் நிறுவனத்தின் முடக்கம் பிரித்தானியாவில் 9,000 ஊழியர்களின் தொழில்வாய்ப்புகளையும், உலகளவில் 22,000 ஊழியர்களின் பணிகளையும் இழக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...