Main Menu

இராணுவ நடவடிக்கையில் இனப்படுகொலை நோக்கம் இருக்கவில்லை – சர்வதேச நீதிமன்றில் ஆங் சாங் சூகி வாதம்

மியான்மாரில் சிறுபான்மையின மக்களை இனப் படுகொலை செய்யும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்பட்டதில்லை என சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாரின் தலைவர் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.

மியன்மார் அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ஆஜராகி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா போராளிகளின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் மட்டுமே மியான்மார் இராணுவம் ஈடுபட்டது. இந்நிலையில் ரக்கினே மாநிலத்தில் உள்ள நிலைவரம் தொடர்பாக முழுமையற்றதும் தவறானதுமான சில தகவல்களை இந்த நீதிமன்றத்தில் காம்பியா அரசு சமர்ப்பித்துள்ளமை வருத்தமளிக்கும் வகையில் உள்ளது.

சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிய வகையில் சில பகுதிகளில் இராணுவ வீரர்கள் அதிகப்படியான பலப்பிரயோகத்தில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான வேறுபாட்டை போதுமான முறையில் தெளிவாக கண்டுபிடிக்க அவர்கள் தவறி இருக்கலாம்.

இதுதொடர்பாக மியான்மர் அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது. எனவே, இந்த சூழலில் இராணுவ நடவடிக்கையில் இனப்படுகொலை என்ற நோக்கம் இருந்ததாக கருதிவிட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மியான்மாரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு எதிரான தாக்குதல்களில் இராணுவம் ஈடுபட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவத்தினரின் உச்சக் கட்டத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உயிருக்குப் பயந்து சுமார் 7 இலட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷிற்கு தப்பிச் சென்றனர்.

இந்நிலையில், ரோஹிங்கியா மக்களைக் குறிவைத்து நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக காம்பியா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இதனால், அரசின் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தன்னுடைய அறிவுறுத்தலின்பேரில் தான் இயங்கி வருகின்றன என்னும் நிலையில் மியான்மார் அரசாங்கத்தின் சார்பில் ஆங் சாங் சூகி சர்வதேச நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி வாதாடினார்.

முன்னதாக, நேற்று காம்பியா நாட்டின் சட்டத்துறை அமைச்சர் அபுபக்கர் டம்படோவ் தங்கள் நாட்டின் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் ஆஜராகி மியான்மார் அரசாங்கத்தின் மீதும் ஆட்சியின் தலைவராக விளங்கும் ஆங் சாங் சூகி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...