Main Menu

இன்றைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் கோபம்- மு.க.ஸ்டாலின்

இன்றைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒட்டப்பிடாரம் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 3-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். ஸ்பிக் நகர் தவசி பெருமாள் சாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

உப்பள தொழில் சங்கத்தினர் உள்பட தொழிலாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை முழுமையாக அ.தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்து இறங்கி 8 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். இன்றைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

ஜெயலலிதா இறந்ததால் அவரை தெய்வமாக பார்த்து வந்த மக்களும், அ.தி.மு.க. வினரும் இன்றைய ஆட்சியாளர் மீது கோபத்தில் உள்ளனர். நான் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க.வினர் உள்பட அனைவரும் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னால் உள்ள மர்மங்களை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அதுகுறித்து கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும். ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக எம்.எல்.ஏ.க்களை விலைபேசி குறுக்கு வழியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தங்களது ஆட்சியை காப்பாற்றவே சிந்தனை செய்கின்றனர். மக்கள் திட்டங்களை நிறைவேற்றவில்லை.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளனர். மக்களின் எழுச்சியை பார்க்கும் போது இது தெரிய வருகிறது. வருகிற 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கையின் போது அது தெரியவரும்.

இதே போல் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், நடக்க இருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற போகிறது. இதன் மூலம் ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் 97 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள தி.மு.க., 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம் மொத்த பலம் 119 ஆக உயரும். இதன் மூலம் மெஜாரிட்டியுடன் தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

இந்த உண்மையை தெரிந்து கொண்ட அ.தி.மு.க. அதை தடுக்கும் வகையில் 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி எடுத்துள்ளது. இதை தடுக்கும் வகையில் தி.மு.க. சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது.

கனிமொழி தூத்துக்குடி எம்.பி. ஆனதும் பாராளுமன்ற கூட்டங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் தூத்துக்குடியில் தங்கி இருந்து மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி தர அவர் காத்து கொண்டிருக்கிறார். என்னிடம் பேசிய விவசாய சங்கத்தினர் கோரம்பள்ளம் குளத்திற்கு அ.தி.மு.க. அரசு தண்ணீர் திறக்காததால் பயிர்கள் கருகி உள்ளது.

இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாற்றப்பட்டுள்ளது என கூறினர். அவர்களது வேதனையை தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நீக்கப்படும். உப்பள தொழிலாளர்களுக்கு உதவித்தொகையாக ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அ.தி.மு.க. அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் அதனை அவர்கள் நிறைவேற்றவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மு.க. ஸ்டாலின் அந்த பகுதியில் உள்ள விவசாய சங்கங்கள், உப்பள தொழில் சங்கத்தினர், குடியிருப்போர் நலச்சங்கம், விவசாய சங்கம் உள்ளிட்ட 19 சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார்.

பகிரவும்...