Main Menu

சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபர் சுட்டுக்கொலை- வேட்டைக்காரன் வெறிச்செயல்

ஒகேனக்கல் வனப்பகுதியில் சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபரை சுட்டுக்கொன்ற வேட்டைக்காரனை போலீசார் தேடி வருகிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் தொப்பூரை அடுத்த ஜருகு கிராமத்தை சேர்ந்த பாலு மகன் முனுசாமி (வயது 25). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கோவை சங்கோதி பாளையத்தில் உள்ள தனியார் லாரி உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அடிக்கடி கம்பெனி வேலையாக கொல்கத்தா செல்வது வழக்கம்.

கடந்த வாரம் கொல்கத்தா சென்றுவிட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அங்கு விருந்தாளியாக வந்து இருந்த ஈரோடு கருங்கல் பாளையத்தை சேர்ந்த தனது அக்காள் மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு ஒகேனக்கல் சென்றார்.

ஒகேனக்கல்லில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்ணப்பட்டியில் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவர்கள் 2 பேரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் அந்த சிறுமியை கையை பிடித்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதை முனுசாமி தடுத்தபோது அவரை நாட்டு துப்பாக்கியால் அந்த நபர் சரமாரியாக சுட்டார். இதில் மார்பு, இடுப்பு உள்ளிட்ட 4 இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே முனுசாமி இறந்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி அலறியபடியே சாலையை நோக்கி ஓடிவந்தார். அவரது சத்தத்தை கேட்டு அங்கு வந்த சுற்றுலா பயணிகள் காட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது முனுசாமி சுடப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள்.

சம்பவ இடத்திற்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், பென்னாகரம் டி.எஸ்.பி. மேகலா, ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் தண்டபானி மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். சுட்டுக்கொல்லப்பட்ட முனுசாமியின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முனுசாமியை சுட்டுக் கொன்றது யார்? என்று முதலில் அடையாளம் தெரியாமல் இருந்தது. கொலை நடந்த அதிர்ச்சியில் இருந்த சிறுமி 4 பேர் கும்பல் தனது மாமாவை சுட்டுக்கொன்றதாக முதலில் கூறினார். பின்னர் அவரிடம் விசாரித்தபோது வேட்டைக்காரன் தோற்றம் கொண்ட ஒருவர் மட்டுமே சுட்டதாக கூறினார். அவர் கூறிய அடையாளங்களை வைத்து கொலைகாரன் யார்? என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

கொலையாளி பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவரை தேடிச்சென்றபோது அவர் வீட்டில் இல்லை. தலைமறைவாகிவிட்டார். அவர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இன்று காலை போலீசார் 4 குழுவாக ஒகேனக்கல் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படை போலீசாரும், வனத்துறையினரும் துப்பாக்கியுடன் காட்டுக்குள் சென்று தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்ட பிறகுதான் அவர் வாலிபர் முனுசாமியை கொன்றாரா? என்பது முழுமையாக தெரியவரும்.

வாலிபர் முனுசாமியை சுட்டுக்கொன்றதாக கருதப்படும் செல்வம் ஏற்கனவே வனத்துறை மற்றும் போலீசாரால் தேடப்பட்டு வருபவர் ஆவார். இவர் காட்டுப் பகுதியில் மான்களை வேட்டையாடி மான் கறிகளை விற்று வந்தார். மேலும் நாட்டுத் துப்பாக்கிகளை வாங்கி வேட்டைக்காரர்களுக்கு சப்ளை செய்யும் தொழிலையும் செய்து வந்தார்.

இவர் பண்ணப்பட்டி மலைப்பகுதியில் வசித்து வருகிறார். ஏற்கனவே இந்த பகுதியில் 20 குடும்பங்கள் வசித்து வந்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி சாய்குமார் தர்மபுரி கலெக்டராக இருந்தபோது மலைவாழ் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தார். அதில் 10 குடும்பங்கள் மட்டுமே இடம்பெயர்ந்து அந்த வீடுகளுக்கு குடியேறினர். செல்வம் உள்பட சிலர் மட்டும் வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டனர். அப்படி காலி செய்ய மறுத்து அங்கேயே வசித்து வந்த செல்வம் தான் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவனை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.  

பகிரவும்...