Main Menu

பாடசாலை, பல்கலைக்கழகங்களில் இன்று முதல் பாதுகாப்பு நடவடிக்கை

பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்குரிய நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். பாடசாலைகளில் இரண்டாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. இதற்கு முன்னதாக முறையான பாதுகாப்பு வழங்குவது பற்றி முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

பாடசாலைகளில் பாதுகாப்பை மென்மேலும் உறுதிப்படுத்துவது தொடர்பான விசேட சுற்றுநிருபம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. பாடசாலைச் சமூகத்திற்கு விளக்கமளித்தல், பாதுகாப்புக் குழுக்களை ஸ்தாபித்தல், பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய நடைமுறைகள் போன்ற விடயங்கள் சுற்றுநிரூபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பாடசாலை சமூகத்திற்கு விளக்கமளிக்கும் முயற்சிகளின் கீழ் இடர்நிலைமையைக் கண்டறிதல், பாதிப்புக்களைத் தவிர்த்தல் முதலான விடயங்கள் பற்றி சகல தரப்புக்களுக்கும் விளக்கமளிப்பது அவசியமாகும்.

இதற்கு அப்பால் பாடசாலை வளாகத்திற்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிபர்மார், ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரது பங்களிப்புடன் குழுக்களையும், துணைக்குழுக்களையும் அமைப்பது பற்றிய 18 யோசனைகள் சுற்றறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

பகிரவும்...