Main Menu

இத்தாலியில் இரண்டு மாதங்களாக பொது முடக்கத்திலிருந்த உணவகங்கள்- மதுபானக்கூடங்கள் திறப்பு!

இத்தாலியில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக இரண்டு மாதங்களாக பொது முடக்கத்திலிருந்த சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் மதுபானக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றால், மிகப்பெரிய பாதிப்பினை எதிர்கொண்டிருந்த இத்தாலி, சிறப்பான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததால், அங்கு கொரோனா வைரஸ் தொற்று தற்போது கணிசமான அளவு குறைந்துள்ளது.

இந்தநிலையில் நாட்டின் பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு ஏனைய நாடுகளை போலவே இத்தாலியும் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியுள்ளது.

இதன்படி, இரண்டு மாதங்களுக்கு பிறகு உணவகங்கள், சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் மதுபானக்கூடங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பெரும்பாலான கடைகளை இத்தாலி இன்று (திங்கட்கிழமை) திறக்கின்றது.

அத்துடன், புகழ்பெற்ற செயின்ட் பீட்டர்ஸ் கதீட்ரல் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது, மேலும் மக்கள் தங்கள் பிராந்தியத்தின் வழியாக மீண்டும் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த மார்ச் மாதம் இத்தாலியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நேற்றுதான் அங்கு குறைவான உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் இத்தாலியில் 145 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், கடந்த மார்ச் 27ஆம் திகதி 900இற்க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆறாவது நாடான இத்தாலியில் இதுவரை, 225,435பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31,908பேர் உயிரிழந்துள்ளனர். 125,176பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 68,351பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகிரவும்...