Main Menu

ஆப்கானிஸ்தான்-தலீபான் பேச்சுவார்த்தை முடிந்தது

கத்தார் நாட்டில் ஆப்கானிஸ்தானும், தலீபான்களும் நேரடியாக நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு தரப்பும் வன்முறையை குறைத்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர்.

டோஹாவில் ஆப்கானிஸ்தான், தலீபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்த படம்.டோஹா:

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி விமானங்களை மோதி கொடூர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்று குவித்த அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தொடுத்த அந்தப் போர், தொடர்ந்து 19-வது ஆண்டாக நீடித்து வருகிறது. அங்கு வரும் செப்டம்பர் மாதம் 28-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அதற்குள் போரை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

இதற்காக தலீபான் பயங்கரவாத அமைப்பினருடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தையில் இறங்கியது. கத்தார் நாட்டின் டோஹா நகரில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் கடந்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. 6 நாட்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுடன் ஆப்கானிஸ்தானில் செல்வாக்கு பெற்றவர்களின் குழு 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. டோஹா சொகுசு ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் 70 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் இரு தரப்பு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த கூட்டறிக்கையில் ஆப்கானிஸ்தானில் சமரசத்தை ஏற்படுத்தவும், வன்முறையை குறைத்துக்கொள்ளவும் இரு தரப்பும் உறுதி எடுத்துக்கொண்டன.

இதையொட்டி கத்தார் பயங்கரவாத தடுப்பு சிறப்பு தூதர் முத்லாக் அல் கஹ்தானி கூறும்போது, “இரு தரப்பினரிடையேயான வேறுபாடுகள் குறைந்துவிட்டன. மோதலை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பும் உறுதி கொண்டுள்ளன” என குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பும் உறுதி கொண்டுள்ள போதும் அங்கு தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.

அங்கு பாக்லான் மாகாணத்தின் தலைநகரான புல் இ கும்ரி நகருக்கு வெளியே நேற்று போர் விமானம் ஒன்று குண்டு வீசியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த குண்டு வீச்சை நடத்தியது ஆப்கானிஸ்தான் படையா அல்லது அமெரிக்க கூட்டுப்படையா என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை.

கடந்த 24 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தான் சிறப்பு படையினர் லோகர், பத்கிஸ், ஹெராத், குணார், பாக்தியா, ஹெல்மாண்ட், பாகலான், கஜினி, உருஸ்கான், நங்கர்ஹார், ஜாபூல், ப்ரயாப், பால்க், சர் இ போல் மாகாணங்களில் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 13 வான்தாக்குதல்களின் விளைவு இது என ராணுவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.

இதற்கிடையே குண்டூஸ் மாகாணம், இமாம் சாகிப் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடிகள் மீது தலீபான்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

இப்படி தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருவது ஆப்கானிஸ்தான் மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

பகிரவும்...