Main Menu

ஆங் சாங் சூகியின் கட்சி உறுப்பினர் பொலிஸ் காவலில் உயிரிழப்பு: மியன்மாரில் தொடர்கிறது போராட்டம்!

மியன்மார் தலைவர் ஆங் சாங் சூகி கட்சியின் உறுப்பினரான கின் மங் லற் (Khin Maung Latt) என்பவர் பொலிஸ் காவலில் உயிரிழந்துள்ளார்.

குறித்த அதிகாரி, இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பரவலாகப் போராட்டங்களை முன்னெடுத்தார் எனவும், நேற்று சனிக்கிழமை இரவு அவர் பபேடன் மாவட்டத்தில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இதுகுறித்து பபேடன் பொலிஸார் தகவல் தெரிவிக்க மறுத்துள்ளதுடன், அவரது மரணத்திற்கான காரணம் அறியப்படவில்லை. இதேவேளை, அவரது உடலின் புகைப்படத்தில் தலையில் கட்டப்பட்டிருந்த துணியில் இரத்தக் கறை இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்க்ள தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், பெரு நகரமான மாண்டலேயில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தை உடைக்க பொலிஸார் ஸ்டன் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியுள்ளதாக மியன்மார் ஊடகங்க்ள தெரிவித்துள்ளன.

அத்துடன், இந்தப் போராட்டத்தில் குறைந்தது 70 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நகரில் மக்கள் மீது இறப்பர் தோட்டாக்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய இராணுவத்தினர் நகரத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் நகரமான பாகனில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து கடந்த பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் தாக்குதலில் இதுவரை 51 பேர்வரை மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...