Main Menu

அ.தி.மு.க. பொதுக் குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்- நீதிபதி உத்தரவு

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (23-ந்தேதி) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பெஞ்சமின், பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

அதில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 2,600 பேர் கலந்து கொள்கின்றனர். எனவே இந்த கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கடந்த 7 மற்றும் 15-ந்தேதி மனு கொடுத்தும் இதுவரை பரிசீலிக்கவில்லை. இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஆவடி போலீஸ் கமிஷனர், திருவேற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழுவின் கால அட்டவணை போலீஸ் தரப்புக்கு இதுவரை வழங்கவில்லை. பொதுக்குழு தொடர்பாக 26 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர். அதற்கு இதுவரை அ.தி.மு.க. பதில் அளிக்கவில்லை.

கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடக்கும் என ஓ.பன்னீர்செல்வம் கருதினால் அவர் எப்போது வேண்டுமானாலும் போலீசாரை நாடலாம் என்று கூறினார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன் அ.தி.மு.க.வின் பொதுக்குழுவை கூட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே போலீஸ் பாதுகாப்பு கேட்டு இவர்கள் இருவரால் தான் மனு கொடுக்க முடியும். 3-வது நபரான மனுதாரர் பெஞ்சமின் இதுபோல போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க முடியாது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த மனுவில் அவர் பொதுக்குழு கூட்டத்தில் யாரோ பிரச்சினை செய்வார்கள். அல்லது கலவரம் செய்வார்கள் என்று கூறி உள்ளார். இது கற்பனையான குற்றச்சாட்டு.

எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி மனுதாரர் பெஞ்சமின் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரா? இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த வக்கீல் அரவிந்த் பாண்டியன் மனுதாரர் அ.தி.மு.க.வில் பொதுக்குழு உறுப்பினர் தான். ஆனால் கூட்டத்துக்கு பாதுகாப்பு கேட்டு இது போல வழக்கு தொடர முடியாது. பொதுக்குழுவில் ஏதாவது பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருந்தால் நாங்களே போலீசாரை அணுகுவோம் என்று கூறினார். பெஞ்சமின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய நாராயணன் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு 2,600 பேர் வரை வருகிறார்கள். அனைவருக்கும் அடையாள அட்டை, அவர்கள் வாகனங்களுக்கு பாஸ் ஆகியவை வழங்கப்படும். இருந்தாலும் ஏதேனும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனுதார் வழக்கு தொடர உரிமை உள்ளது என்று கூறினார். இதையடுத்து நீதிபதி பொதுக்குழுவுக்கு வருகை தரும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் கட்சி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். போலீசாரும் இந்த விஷயத்தில் நடுநிலையாக செயல்பட வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். பொதுக்குழுவில் கால அட்டவணை மற்றும் நிகழ்ச்சி தொடர்பாக 26 கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர். அதற்குரிய விளக்கத்தை மதியம் 1 மணிக்குள் அ.தி.மு.க. போலீசாருக்கு அளிக்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

பகிரவும்...