Main Menu

அவுஸ்ரேலிய ஜாம்பவான்களை வீழ்த்தி இலங்கை அணியின் ஜாம்பவான்கள் அணி திரில் வெற்றி!

இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்கும் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்கும் இடையில் இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

வீதிப்போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் இந்த இருபதுக்கு-20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பை வங்கடே மைதானத்தில் மோதின. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக, ரொமேஸ் களுவிதாரண 30 ஓட்டங்களையும், சாமர கபுகெதர 28 ஓட்டங்களையும், திலகரட்ன டில்சான் 18 ஓட்டங்களையும் அஜந்த மென்டிஸ் 17 ஓட்டங்களையும் அணிக்காகப் பெற்றுக்கொடுத்தனர்.

அத்துடன், மாவன் அத்தப்பத்து 14 ஓட்டங்களையும் சசித்ர சேனநாயக 13 ஓட்டங்களையும் உபுல் சந்தன 5 ஓட்டங்களையும் சமிந்த வாஸ் 4 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். மேலும், பர்வீஸ் மஹ்ரூப் 20 ஓட்டங்களுடனும் ரங்கன ஹேரத் 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், சேவியர் டொஹேர்ரி, ஜெசன் கிரேஸ்ஷா மற்றும் பிரட் ஹொட்ஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அத்துடன் கிளின்ற் மக்கேய், மார்க் கொஸ்க்ரோவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்நிலையில் 162 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி, இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான்களின் பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே தடுமாறியது.

அந்தவகையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மிச்சல் கிளிங்கர் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். அத்துடன் அடுத்தடுத்து வீரங்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்நிலையில், அவுஸ்ரேலியாவின் முன்னாள் ஜாம்பவான்கள் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களைப் பெற்று 7 ஓட்டங்களால் இலங்கையின் முன்னாள் ஜாம்பவான்களிடம் தோல்வியடைந்தது.

அவுஸ்ரேலிய அணி சார்பாக, அதிக பட்சமாக அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நாதன் ரியர்டன் 5 சிக்ஸர்கள் 9 பௌண்டரிகள் அடங்கலாக 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுடன் சதம் பெறுவதற்கான வாய்ப்பை இழந்தார்.

அத்துடன், சேவியர் டொஹேர்ரி 15 ஓட்டங்களையும் பிரட் ஹடின் 10 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர். ஏனைய வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடனும் ஓட்டமெதுவும் பெறாமலும் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில், திலகரட்ன டில்சான், ரங்கன ஹேரத் மற்றும் பர்வீஸ் மஹ்ரூப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அத்துடன் சமிந்த வாஸ், சசித்ர சேனநாயக்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனான அவுஸ்ரேலிய அணியில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நாதன் ரியர்டன் தெரிவுசெய்யப்பட்டார்.

பகிரவும்...