Main Menu

அரசு இயந்திரங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார் மோடி – மம்தா

முதல் மந்திரிகளின் வீடுகளில் ரெய்டுகளை ஏவிவிட்டும் அரசு அதிகாரிகளை மாற்றியும் தேர்தல் நேரத்தில் அரசு இயந்திரங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மோடி மிரட்டுவதாக மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்காளம் மாநிலம், ஜல்பைகுரி மற்றும் பலகட்டா பகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் அம்மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி இன்று உரையாற்றினார். 

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள கூச் பேஹார் பகுதியில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் தன்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கிப் பேசிய பிரதமர் மோடிக்கு இந்த கூட்டங்களில் பதிலளித்த மம்தா பானர்ஜி, ’முன்னர் கம்யூனிஸ்டுகள் ஆட்சி காலத்தில் நடைபெற்ற காட்டு தர்பார் அரசில் ஆண்டுதோறும் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர். 

எங்கள் ஆட்சியில் இந்த மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. குறைந்த விலையில் உணவு தாணியம், தரமான மருத்துவம் என மத்திய அரசு செய்ய தவறிய பல நல்ல திட்டங்களை இந்த மாநில மக்களுக்கு நாங்கள் நிறைவேற்றி தந்திருக்கிறோம்’ என்றார். 

’மோடியை பார்த்து நான் பயப்படுவதாக அவர் கூறியுள்ளார். நான் யாரை கண்டும் பயப்பட மாட்டேன். மோடிதான் என்னை கண்டு அஞ்சுகிறார். 

எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் நேரத்தில் ஆந்திர முதல் மந்திர, மத்தியப்பிரதேசம் மற்றும் கர்நாடக முதல் மந்திரி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை ஏவி விடப்பட்டுள்ளது. 

எவ்வித காரணமும் இல்லாமல் ஆந்திர மாநில அரசின் தலைமை செயலாளர் நீக்கப்பட்டு வேறொருவர் அந்த பதவியில் அமர்த்தப்படுகிறார். மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் கமிஷன் இந்த திடீர் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு எப்படி தலையிடலாம்?’ என்று கேள்வி எழுப்பிய மம்தா பானர்ஜி, தேர்தல் நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை என்று இதற்கு விளக்கம் கூறுபவர்கள் பிரதமரின் செயலாளரையும் மாற்றி இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...