Main Menu

அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களையும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டி மாநகர சபையின் கரலிய அரங்கம் மற்றும் கலைக்கூடம் என்பவற்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளதால் மீண்டும் கடன் பெற முடியும். எனவே, விரைவில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க முடியும்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நாடுகளின் கடன்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் காரணமாக இந்த நிலையை எட்ட முடிந்தது.

நமது நாட்டின் கடனை அடைக்கக் கூடிய குறைந்தபட்ச வருமானம் இருப்பதைக் காட்ட வேண்டும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியை 10.4வீதமாக அதிகரிக்க வேண்டும் என்பது எங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கு.

2024இல் அந்த இலக்கை அடைய முடியாது. இந்த இலக்கை 2025, 2026 காலப்பகுதிக்குள் அடையலாம். எனவே, நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி 2024 இல் மொத்தத் தேசிய உற்பத்தியை 9.2 வீதமாக எட்டுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டோம்.

வரிகளை உயர்த்தினால், பிரபலம் குறையும். ஆனால் பொருளாதாரத்தை காப்பாற்றினால், நமது வங்குரோத்து நிலை மறைந்துவிடும்.

சில நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக சிலர் கூறுகிறார்கள்.

இதை எதிர்ப்பவர்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை முன்னெடுக்காவிட்டால், வேறு என்ன செய்ய முடியும் என்ற மாற்று வழியைக் கூறவேண்டும்.

இதுதான் எமது அரசியலில் உள்ள மிகப்பெரிய பலவீனம். பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை. கடினமான முடிவுகளை எடுக்க யாரும் தயாராக இல்லை.

எனவே இது தொடர்பில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...