Main Menu

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி டிசம்பரில் ஆரம்பமாகும் – சாக்ஷி மஹராஜ்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகும் என உத்தர பிரதேச மாநிலத்தின் பா.ஜ.க பிரமுகர் சாக்ஷி மஹராஜ் தெரிவித்துள்ளார்.

உன்னாவ் நகரில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “அயோத்தி நகரம்தான் ராமர் பிறந்த பூமி என்பதற்கு தொல்லியல் துறையிடம் பலமான ஆதாரங்கள் உள்ளன.

அயோத்தி நிலம் தொடர்பான விசாரணையை நிறைவுசெய்த உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு நவம்பர் 17-ம் திகதிக்குள் தீர்ப்பு வழங்கவுள்ளது. மிகவும் சாதகமான தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அதன் பின்னர், அந்த இடத்தில் முன்னர் இருந்த சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்ட டிசம்பர் 9-ம் திகதி அங்கு பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

ஷியா வக்ப் வாரியம் உள்பட பல இஸ்லாமிய அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அங்கு ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...