Main Menu

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த இன்னொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: மீண்டும் போராட்டம் வெடித்தது!

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த இன்னொருவர் அற்லான்டா பொலிஸாரின் (Atlanta police) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நிலையில், அற்லான்டா பொலிஸ் தலைமைப் பதவியில் உள்ள அதிகாரி எரிகா ஷீல்ட்ஸ் (Erika Shields) பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அந்நாட்டில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்ட் பொலிஸ் காவலில் வைத்து கொல்லப்பட்டதையடுத்து எழுந்த போராட்டங்கள் அடங்காத நிலையில் மேலும் ஒரு கறுப்பரினத்தைச் சேர்ந்தவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றதுடன் இதில், ரேய்ஷார்ட் புரூக்ஸ் (27 வயது) (Rayshard Brooks) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அங்கு போராட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.

அவர், பொலிஸாரிடமிருந்து டேசர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடியதாகவும் இதனையடுத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, அற்லான்டாவில் புரூக்ஸ் சுடப்பட்ட இடத்தில் உள்ள உணவு விடுதியை போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தியதுடன் நெடுஞ்சாலையில் போக்குவரத்தையும் முடக்கினர்.

இதேவேளை, புரூக்ஸை சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அந்த நகர மேயர் அறிவித்தார்.

மேலும், அற்லான்டா தலைமை பொலிஸ் அதிகாரி எரிகா ஷீல்ட்ஸ் இராஜினாமா செய்ததையடுத்து இடைக்கால தலைமை அதிகாரியாக ரோட்னி பைரண்ட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஜோர்ஜியா விசாரணைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவு விடுதியொன்றில் கார்கள் நிறுத்துமிடத்தில் புரூக்ஸ் காரிலேயே தூங்கியுள்ளார். இதனையடுத்து ஏனைய வாடிக்கையாளர்கள் வருகையை அவர் தடுப்பதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதையடுத்து, இவரைப் பொலிஸார் கைதுசெய்ய முயற்சித்த போது பொலிஸாருடன் கைகலப்பு ஏற்பட்டுள்ளது, இதில் அதிகாரி ஒருவரின் டேசர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து புரூக்ஸ் ஓடியுள்ளார்.

பின்னர், பொலிஸ் அதிகாரிகள் அவரைத் துரத்தியுள்ளனர், ஆனால் அவர் துப்பாக்கியை பொலிஸாரை நோக்கிக் காட்டி அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின்போது புரூக்ஸ் மதுபோதையில் இருந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டின் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்று அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவரது உயிர் பிரிந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவரது கொலை இன்னொரு பெரிய போராட்டத்தை அமெரிக்காவில் உருவாக்கியுள்ளது.

பகிரவும்...