Main Menu

அதிகாரப் பகிர்வில் உறுதி: தமிழ் நாட்டுடனான போக்குவரத்துகளும் விரைவில்- கோபால் பாக்லே உறுதியளிப்பு!

இலங்கையில் இனப்பிரச்சினை விடயத்தில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு மூலமாகத்தான் தீர்வு என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஈழத் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தும் போக்குவரத்துச் சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, இன்று பல்வேறு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில், இந்தச் சந்திப்புக் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், “இந்தியத் தூதுவரினுடைய வடக்கு, கிழக்கு விஜயம் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இளம் தலைவர்களைச் சந்திக்க வேண்டும் என்கின்ற ஆவலை வெளிப்படுத்திய காரணத்தினால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளம் தலைவர்களுக்கு இன்றைய சந்திப்பிலே நாம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

பேச்சுவார்த்தையிலும் அவர்களுடைய கருத்துக்கள்தான் கூடுதலாகப் பகிரப்பட்டது. இந்தச் சந்திப்புக் குறித்து நிறைவான மகிழ்ச்சியை தூதுவர் வெளிப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பில், அரசியல் தீர்வு குறித்தும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற ஆக்கிரமிப்புத் தொடர்பாகவும் அபிவிருத்தி விடயங்களில் இந்தியாவின் பங்களிப்புத் தொடர்பாகவும் பேசப்பட்டன.

இந்நிலையில், நாம் பேசிய அனைத்து விடயங்களுக்கும் இந்தியத் தூதுவர் பதில் சொல்லியிருக்கிறார். நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதில்களைச் சொல்லியிருக்கிறார்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், இந்தியா தொடர்ந்தும் முன்னர் உள்ள நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும், அது முழுமையான அதிகாரப் பகிர்வு உள்ள ஒரு விடயமாகத் தான் இருக்கவேண்டும் என்பதில் எப்பொழுதும் மாறாத தீர்மானத்துடன் இருப்பதாகவும் தூதுவர் கூறியுள்ளார். அது, கொழும்பிலாக இருக்கட்டும் ஜெனீவாவில் இருக்கட்டும் ஒரே நிலைப்பாடுதான் இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

அத்தடன், அபிவிருத்தி விடயங்களில் பல்வேறு வாக்குறுதிகளை அவர் கொடுத்துள்ளார். நேரம் குறைவாக இருந்த காரணத்தினால் பல விடயங்களை விபரமாகப் பேசமுடியவில்லை.

இந்நிலையில், இந்திய மக்களோடு அதாவது, தமிழ்நாட்டில் உள்ள மக்களோடு இருக்கின்ற தொடர்பாடல் சம்பந்தமாக பலாலிக்கும் சென்னைக்குமான விமானப் போக்குவரத்து வெகு விரைவிலே ஆரம்பமாகும் என்பதை தூதுவர் உறுதிப்படுத்தினாார்.

காங்கேசன் துறைக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான படகுப் போக்குவரத்துத் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்ட கேள்விக்கு, குறித்த சேவையைத் தொடங்கவதற்கான வேலையில் தற்போது ஆட்களைத் தெரிவுசெய்யும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் விரைவிலே அது ஆரம்பமாகும் என்ற பதிலையும் சொல்லியிருக்கிறார்.

இதன்மூலமாக, தமிழ் மக்களுக்கு இடையிலே உறுதியான ஒரு தொடர்பாடலை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை நாம் அடையமுடியும் என்ற கருத்தை இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே வெளிப்படுத்தியுள்ளார்” என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...