வன்னி மக்களின் தொண்டன் ‘கிளி பாதர்’ நினைவு தினம்

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு உதவுவதற்காகவே தனது வாழ்வினை அர்ப்பணித்த கிளி பாதர் என அறியப்பட்ட ‘மக்களின் மதகுரு’ மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம் அடிகளாரின் (‘கிளி பாதர்) 9ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்ட்டிக்கப் படுகிறது.

ஏப்பிரல் 20 2008 அன்று தேவாலயமொன்றில் ஞாயிறு பூசையினை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது மல்லாவி வவுனிக்குளம் வீதியில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத்தாக்குதலில் கிளி பாதர் என மக்களால் வாஞ்சையோடு அழைக்கப்படும் கருணாரத்தினம் அடிகளார் கொல்லப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத்தினரே இந்தக் கொலையினைப் புரிந்ததாகப் விடுதலைப் புலிகள் கூறியிருந்தார்கள்.

“துணிவும், பலம் மற்றும் மனித நேயம் ஆகியவற்றைத் தன்னகத்தேகொண்ட உதாரண புருசராக அவர் திகழ்ந்தார். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே அவர் தனது வாழ்வினைக் கழித்தார். இவரது மறைவு நாட்டினது தெற்கு மற்றும் வடக்கிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்” என இந்த கொழும்பு மறைமாவட்டத்தினைச் சேர்ந்த மக்கள் உரிமைச் செயற்பாட்டாளரான மதகுரு திறான்சி பெனாண்டோ கூறியிருந்தார்.

“போரின் போது அவர் மக்களுடன் இருந்தார். இடம்பெயர்ந்த மக்களிடம் அவர் அதியுச்ச பரிவினைக் காட்டினார். இவர்களது வாழ்க்கைதரத்தினை மேம்படுத்தும் வகையில் இவர் ஓய்வின்றி உழைத்தார்” என அவர் தொடர்து தெரிவித்தார்.

சுதந்திரமாகச் செயற்பட்ட உள்ளூர் மனித உரிமைக் காண்காணிப்பு அமைப்பான வடக்குக் கிழக்கு மனித உரிமைச் செயலகம் என்ற ஒன்றைத் தோற்றுவித்த கருணாரத்தினம் அடிகளால் அதன் பணிப்பாளராகச் செயற்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது..


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !