லெப்.கேணல் ஜஸ்ரினின் வீர வரலாற்று நினைவுகள்
லெப்.கேணல் ஜஸ்ரின்
பொன்னுச்சாமி பாஸ்கரன்
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
தாய் மடியில் 03-01-1962
தாயக மடியில் 17-09-1991
எல்லையில் நின்று எதிரியை விரட்டியவன் .
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்
போர்முனைக்குச் சென்றவர்கள் வென்ற துண்டு வந்ததில்லை என்பார்கள். இதை ஜஸ்ரினும் படித்திருந்ததினாலோ என்னவோ இறுதியாக மணலாற்றுச் சண்டைக்குச் செல்வதற்கு முன்னர் தனது தாயை அவன் சந்தித்தபோது “அம்மா, நான் சண்டைக்குப் போறேன். ஆனால் நான் உயிரோடை திரும்பி வர மாட்டன்” என்று கூறிவிட்டுச் சென்றான்.
கண் தெரியாத அந்தத் தாயிடம் அதனைத் தெரிவித்து விடவேண்டும் என்று அவனது உள்ளுணர்வு அவனைத் தூண்டியுள்ளது. தாய்க்கு மகனாகச் செய்ய வேண்டிய கடமையை விட மண்ணின் மகனாக அவன் ஆற்றவேண்டிய கடமை அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது.
1984ம் ஆண்டு காலத்திலிருந்து இந்த மண்ணை முத்தமிடும்வரை பல்வேறு வகைகளில் போராட்டத்தின் வளர்ச்சிக்காகப் பங்காற்றியவன் அவன். பயிற்றி முகாம் பொறுப்பாளராக – வெடி பொருட்கள் தயாரிக்கும் குழுவுக்குப் பொறுப்பாக – குழுத் தலைவனாக, இறுதியில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவில் 3வது தளபதியாக இவ்வாறு இவன் ஆற்றிய பங்கு அளப்பெரியது.
பயிற்சி முகாமில் சிலர் தனித்துவமாக தெரிவார்கள். பல நூறு பேர்களுக்குள் அவர்களது ஆற்றல் தனித்து மின்னும். அவ்வாறு தமிழக மண்ணில் அமைந்திருந்த எமது ஐந்தாவது பயிற்சி முகாமில் இனங்காணப்பட்ட போராளிகளில் ஒருவன்தான் ஜஸ்ரின். இவனது திறமைகளை அவதானித்த அந்தப் பயிற்சிமுகாமை நடத்திய ராதா இவனைத் தன்னோடு மன்னாருக்குக் கூட்டிச் சென்றார். மன்னார் மண்ணில் பயிற்சி முகாமமைத்து போராளிகளை உருவாக்கும் பொறுப்பு இவனுக்கு வழங்கப்பட்டது. தலைவரிலிருந்து பொன்னம்மான் கற்றதை, பொன்னம்மானிலிருந்து ராதா கற்றதை, ராதாவிலிருந்து ஜஸ்ரின் கற்றதை மொத்தமாக மன்னார் மாவட்டப் போராளிகள் கற்றுக்கொண்டனர்.
மன்னார் மண்ணிலிருந்து 25 இராணுவம் பலி, 50 இராணுவம் பலி என்றெல்லாம் செய்தி வரும்போது இவன் தனது தோழர்களிடம் “பார் மச்சான், என்ரை பெடியள் எப்படிச் சண்டை பிடிக்கிறாங்கள் எண்டு” என்று சொல்லி மகிழ்ச்சியடைவான். ஒரு தந்தையின், ஒரு ஆசிரியனின் நிலையிலிருந்து பெரும் மகிழ்ச்சியல்லவா அது! வரண்ட பூமி என இனங்காணப்பட்ட மன்னார் தாக்குதலில் மட்டும் வளமான பூமி என இனங்காணப்பட்டது. விக்டரின் காலத்திலிருந்தே அந்தப் பெயர், அதைத் தொடரச் செய்ததில் கணிசமான பங்கு ஜஸ்ரினுக்கு உண்டு.
போர்த் திட்டமிடுதல், பயிற்சி அழித்தலில் மட்டுமல்ல, பல்வேறு வகையான ஆற்றல்களும் மிக்கவனாகவே இனங்கானப்பட்டான். இவன் ஒரு சிறந்த நடிகன். பல்வேறு வகையான பாத்திரங்களில் தோன்றி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவன் இவன். இவனோடு பயிற்சி முகாமில் பயிற்சியெடுத்தவர்கள் நத்தார் தாத்தாவாக இவன் துள்ளி ஆடிய அழகையும், ஒரு கலைநிகழ்ச்சியில் “ஏக் தோ தீன்” என்ற கிந்திப் பாடலுக்கு உடலை அசைத்து அசைத்து ஆடிய ஆட்டத்தையும் பசுமையான நினைவுகளாக நினைவுகூருகின்றனர். மாறுபட்ட முகவடிவங்க்களை வெளிப்படுத்துவதில் வல்லவன் இவன் என்பதில் இவனைத் தெரிந்த எவருக்கும் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.
அதே போலவே சமையல் செய்வதிலும் நளன்தான். அத்துடன்
உணவு சமைக்கும் முறைபற்றி இவன் விபரிக்கும் பாங்கு — அது அலாதியானதுதான் — இப்படி — அப்படி —- என்று இவன் அபிநயத்தோடு சமையல் செய்யும் முறையைக் கேட்டவருக்கே நாவில் எச்சில் ஊறும். தான் தங்கியிருக்கும் முகாமில் கூட இருப்பவர்களுக்கு விசேடமான உணவு வகைகளை தயாரித்துக் கொடுப்பது இவன் வழக்கம்.
இவனுக்கு தமிழுடன் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைச் சரளமாகப் பேசும் ஆற்றலும் இருந்தது. எப்போதும் மீசையில்லாமல் நன்கு சவரம் செய்யப்பட்ட முகத்துடன் காணப்படும் இவன் சிங்களம் பேசும்போது அசல் சிங்களவனே நம்பமாட்டான் இவன் தமிழனென்று. பயிற்சி முகாமில் இவன் ஏற்ற பாத்திரங்களிலொன்று சிறிலங்கா இராணுவ அதிகாரியாகத் தோன்றியமை. அதை இவனுடன் பயிற்சிஎடுத்த போராளிகள் மறக்கவே மாட்டார்கள்.
மிக இளகிய மனம், இரக்க சுபாவமுடைய இவன் தோழர்களுடன் முரண்டு பிடிப்பது முண்டு. பின்னர் தானே தணிவான், கண்ணீர் விட்டு அழுவான். சண்டை பிடித்தவர்களுடன் முன்னதைய விட இன்னும் நன்றாகப் பழகுவான். “இதுதான் ஜஸ்ரின்” என்று அவர்களுக்குத் தெரியுமாதலால் அவர்களும் ஒன்றும் பேசுவதில்லை.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்
போர் இவனுக்குப் பிரியமானது. மன்னாரில் விக்ரரைக் குறிவைத்து 1986ம் ஆண்டு நாயாற்று வெளியில் சிறிலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலை முறியடித்து அந்த மோதலை எமக்குச் சாதகமான சண்டையாக மாற்றியவர்களில் இவனும் ஒருவன். அந்த மோதலில் இவனது காலிற் பட்ட காயம் ஏதோ ஒரு வகையில் புதுப்பித்துப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தது. இவனது மரணம் வரை ஓடும் போதும் நடக்கும் போதும் அது இவனுக்கு வேதனையைக் கொடுத்தது. ஆனால் அதை இவன் கவனத்திலெடுக்கவில்லை. சிறிலங்காவுடனான போர், பின்னர் இந்தியப் படைகள் தொடுத்துக் கொண்ட புலிகளின் போர், தற்போது மீண்டும் சிறிலங்கா இராணுவத்துடன் நடைபெறும் போர், அனைத்தையும் இந்தக் காயத்துடனேயே இவன் எதிர்கொண்டான். வன்னிப் பிராந்தியமே இவனது போர்த்திறனை அறிந்து கொண்டது. கட்டைக்காட்டில் சடலங்கலாகச் சென்ற பல இராணுவத்தினர் இவனது திறமைக்குச் சாட்சிகளாயினர்.
இறுதியில் எமது தாயகப் பூமியைப் பிரிக்கும் நோக்கில் மணலாற்றில் சிறிலங்காப் படைகள் நடாத்திய போரை முறியடித்தான். அந்தப் போரிலேதான் இவன் வீரமரணமடைந்தான். எல்லையில் நின்று எதிரியை விரட்டிய இவன் பூரணமான மனநிறைவுடன் வீரமரணமெய்தினான், தான் உருவாக்கிய போராளிகள் நாளை தான் பிறந்த காங்கேசன்துறை உட்பட தமிழீழ மண் முழுவதையும் மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்.
தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி வீழ்ந்த லெப்.கேணல் ஜஸ்ரின் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.
தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.
|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
மனோ
விழுதுகள் 1992
(இணைய தட்டச்சு உரிமம் தமிழீழ வேங்கை)