மார்செயின் இரு வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு! – இருவர் சாவு. ஒருவர் கவலைக்கிடம்!!
மார்செ நகரின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் சாவடைந்துள்ளனர். மார்செ 15 ஆம் வட்டாரத்தின் Bassens பகுதியில் முதலாவது துப்பாக்கிச்சூடு இரவு 11.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இதில் 20 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் சாவடைந்துள்ளார். இதே துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 20 வயதுடைய மற்றொரு நபரும் காயமடைந்துள்ளார். இரண்டாவது சம்பவம் அதிகாலை 4 மணிக்கு, மார்செயின் 13 ஆம் வட்டாரத்தின் Frais-Vallon பகுதியில் இடம்பெற்றுள்லது. இங்கு 23 வயதுடைய இளைஞன் ஒருவர் சாவடைந்துள்ளார். இங்குள்ள La Martine அரங்கத்துக்கு அருகே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் மீது மூன்று தடவைகள் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இத்துப்பாக்கிச்சூடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை 33 வயதுடைய ஒருவரும் மார்செ நகரில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி சாவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.