பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகம் – வாசுதேவ
பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகம் என நீர்வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன் கூட்டணி அமைத்துக்கொண்டே தேர்தலுக்குச் செல்லவேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கம் அமைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வாசுதேவ இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டி போடவேண்டும் என்றும் கூட்டணி அமைத்துக்கொண்டு செல்லத் தேவையில்லை என்றும் ஒருசில உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறானவர்கள் தங்கள் நிலைமையை விட தேவையற்றவிதமாக எண்ணுகின்றனர். ஆரம்பத்தில் இவர்கள் இவ்வாறு நினைப்பார்கள். ஆனால் சிறிது காலம் செல்லும்போது உண்மை நிலைமையை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
அதனால் பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்துக் கொண்டே தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும். கூட்டணி இல்லாவிட்டால் எங்களால் அரசாங்கம் அமைப்பது கடினம் என்பதே எனது நிலைப்பாடு.
அத்துடன் பொதுத் தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். என்னைப் பொறுத்தவரை மூன்றில் இரண்டு என்பது சாத்தியமில்லாத விடயம்.
அத்துடன் ஜனாதிபதி தெரிவிப்பதுபோல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியுமானால் எமக்கு பல வேலைத் திட்டங்களை மேற்கொள்ளலாம்.
அரசாங்கத்துக்கும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதென்பது மிகவும் வரவேற்கத்தக்கது. ஏனெனில் இதன் மூலம் அரசாங்கத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நாட்டுக்குத் தேவையான சட்டதிட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். என்றாலும் இது இலகுவான காரியமல்ல” என அவர் தெரிவித்தார்.