Main Menu

புலிகளின் முதல் முஸ்லிம் மாவீரன் லெப் ஜுனைதீன் (ஜோன்சன்) அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

புலிகளின் முதல் முஸ்லிம் மாவீரன் லெப் ஜுனைதீன் (ஜோன்சன்) அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று ஆகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது தென் தமிழீழத்தில் உருவாகிய இயக்கங்களுள் “தமிழீழ விடுதலை நாகங்கள் ” (நாகபடை) சிலகாலம் பரபரப்பை உருவாக்கியது இதற்கு தலைமை தாங்கியவர் ஒட்டமாவடியை சேர்ந்த ஜுனைதீன்.

அரசுக்குத் துணைபோன பிரமுகர்கள் மீது மேற்கொண்ட சகல தாக்குதல் நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியவர் இவர் இக்குழுவுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தொடர்ந்து இயங்க முடியாமல் போன நிலையில் தனது எதிர்கால பங்களிப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மூலமாக வழங்க முடிவெடுத்தார்.

ஜுனைதீன் இந்தியாவில் புலிகளின் மூன்றாவது பயிற்சி முகாமில் பொன்னம்மான், புலேந்திரன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார் இக்காலத்தில் ஜோன்சன் எனும் பெயர் இவருக்கு சூட்டப்பட்டது முகாமில் தனது தனி திறமைகளை அடிக்கடி வெளிப்படுத்தினார் ஓவியத்துறையிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது அவர் வரைந்திருந்த ஓவியங்களில் உப இயந்திரத் துப்பாக்கி எனும் படம் தேசியத்தலைவரின் கவனத்தை ஈர்த்தது.

ஒரு ஆயுத போராட்ட குழுவை ஆரம்பித்து இன விடுதலைக்காக போராடியவர் என்ற வகையில் இவர் மீது தனிப்பற்று அவருக்கு இருந்தது பிரபாகரனே தனது தலைவர் என்று ஏற்றுக்கொண்ட ஜூனைதீனுக்கு (ஜோன்சன்) அவருடனான சந்திப்புக்கள் மன நிறைவைக் கொடுத்தன இச்சந்திப்புக்களில் விடுதலைப் போராட்ட வழிமுறைகள் பற்றியே அதிகம் கலந்துரையாடப்பட்டன அதில் தமிழ் -முஸ்லிம் இனங்களின் உறவை பலப்படுத்த ஆற்ற வேண்டிய பணிகள் முக்கியத்துவம் பெற்றன.

பயிற்சி முகாமிலிருந்து வெளிவந்ததும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டார் ஜுனைதீன் (ஜோன்சன்) கிட்டு தலைமையில் 1985 நடைபெற்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத் தாக்குதலில் பங்கு பற்றி தனது ஆற்றலை நிரூபித்தார் 1985/02/13 நடைபெற்ற கொக்குளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும் பங்குபற்றி பின்னர் மட்டக்களப்புக்கு சென்றார் அங்கே புதிய பலத்துடன் களமாடும் கனவுகளோடு இருந்தார்.

முஸ்லிம் – தமிழ் கலவரத்தின் போது மஞ்சந்தொடுவாய் பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சில தமிழர்களை புலிகள் தோணிகளில் கொண்டுவந்து விசாரணை நடந்தினர் மறுதரப்பால் இவர்களும் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது இந்த விசாரணைகளை ஜுனைதீனும் (ஜோன்சன்) பார்த்துக்கொண்டிருந்தார்.

விசாரித்துக் கொண்டிருந்த அப்போதைய மட்டக்களப்பு தலைமையை தனியே அழைத்து ” அவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் நாங்கள் ஒரு தரப்புக்கு சாதகமாக நடந்து கொள்ளக்கூடாது பாதிப்பின் வலியும் வேதனையும் எல்லோருக்கும் ஒரே மாதிரித்தான் வேணுமெண்டா கடுமையா எச்சரிச்சுப் போட்டு அனுப்புங்கோ வேறு ஒன்றும் செய்யவேண்டாம்” என வலியுறுத்தினார்.

இந்த நிதானமான வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன ஒரு பதட்டமான சூழ்நிலையிலும் இரு இனங்களின் ஐக்கியத்தையே முதன்மைப் படுத்தினார் அவர் 07 /05 /1985 கரடியனாற்றில் பொலிஸாருடன் மோத வேண்டிய வேண்டிய சூழல் ஏற்பட்டது G3 துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே தப்பி வந்தார் இதே போல் ஈரளக்குளப்பகுதியில் அமைக்கப்படட பயிற்சி முகாமில் புதிதாக இயக்கத்தில் இணைந்து கொண்டோர் இருந்தனர் அந்தப்பகுதியை வட்டமிட்டு தாக்குதல் நடாத்திய உலங்கு வானுர்தியை கீழே இறங்கவிடாமல் G3 துப்பாக்கியால் சுட்டு விரட்டினார்.

யுத்த நிறுத்த காலத்தில் ஜுனைதீனும் சக போராளி ஜோசெப்பும் கரடியனாற்றில் இருந்து ஆயித்தியமலைக்குச் சென்ற நேரம் பொலிஸார் கைதுசெய்து பனாகொடை இராணுவ முகாமுக்கு அனுப்பினர்.

பின்னர் ஜுனைதீனும், ஜோசெப்பும் அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டிய தேவை இருந்தது சித்திரவதைகள் தொடர்ந்தால் பாதகமான நிலைமைகள் ஏற்படும் என உணந்தனர் 30/11/1985 அன்று படையினரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்கையில் சுட்டுக்கொல்லப்பட்டு வீரகாவியமானார் ஜுனைதீன் மற்றும் ஜோசெப். தமிழீழ விடுதலை போராட்டத்தில் களப்பலியான முதல் முஸ்லிம் மாவீரன் என வரலாற்றில் தனது பெயரைப் பதித்துக் கொண்டார் ஜுனைதீன்.

‘ஜுனைதீனாக 22/8/1963 பிறந்து ஜோன்சனாக 30/11/1985 வீரச்சாவு’

பகிரவும்...