பிரெக்ஸிற் விவாதத்தை தவிர அரசியல்வாதிகள் வேறு எதையும் செய்யவில்லை – பிரித்தானியரின் விரக்தி

கடந்த மூன்று வருடங்களாக பிரெக்ஸிற் குறித்த விவாதம் மட்டுமே இடம்பெற்று வருவதாகவும் இதனைத் தவிர அரசியல்வாதிகள் வேறு எதையும் செய்யவில்லை எனவும் பிரித்தானியர் ஒருவர் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அரசியல்வாதிகள் உட்பட பலர் கலந்துகொண்ட கேள்வி நேரம் என்ற நிகழ்ச்சியின்போது பேசிய போதே சார்லி நெய்ல் (Charlie Neil) என்பவர் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்துடன், மன அழுத்தத்தை ஏற்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் டேவிட் கமரொன் மீது வழக்குத் தொடர முடியுமா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
இதன்போது, பிரெக்ஸிற் குறித்து உண்மையாகவே என்ன நினைக்கிறீர்கள் என்று கூற முடியுமா என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார். அதற்கு மொத்தமும் ஒரு கெட்ட கனவு போல் இருக்கிறது என்று கூறிய சார்லி, தான் இவற்றைக் கேட்டு களைத்துப் போயுள்ளதாகவும் கூறினார்.
“உங்களுக்கு மூன்று ஆண்டுகளும் மூன்று மாதங்களும் கொடுக்கப்பட்டன, ஆனால் நீங்கள் உங்களுக்குள் சிறு பிள்ளைகள் போல் விவாதித்துக் கொண்டீர்களே தவிர ஆக்கபூர்வமான எதையும் செய்யவில்லை” என்றார்.
அத்துடன், “உங்களுக்கு ஒருவர் மீது ஒருவர் மரியாதை கொடுக்கவில்லை. பிரித்தானிய மக்கள் மீதும் மரியாதையில்லை” என்றார் சார்லி.
அவரது பதிலைக் கேட்ட பார்வையாளர்கள் கரவொலி மூலம் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.