பயங்கரவாத ஆதரவு நாடுகள் மீது கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி வலியுறுத்தல்
பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து, நிதியுதவி செய்து வரும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்றுள்ளார். மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டேன். அப்போது தாக்குதல் நிகழ்த்தப்பட்ட தேவாலயத்தை நேரில் கண்டேன். அப்பாவி மக்களின் உயிர்களை பலி வாங்கிய பயங்கரவாதத்தின் கொடூரம் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது.
ஆப்கானிஸ்தானுக்கு ஒத்துழைப்பு: நமது பிராந்தியத்தில் அமைதி ஏற்பட வேண்டுமானால், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவச் செய்ய வேண்டியது அவசியமாகும். அதற்காக நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டியதே நம் அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை முறையாக நடைபெறுவதற்காக, வருங்காலத் திட்டத்தை எஸ்சிஓ வகுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
சிறப்பான பங்களிப்பு: எஸ்சிஓ அமைப்பில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இணைந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா சிறப்பான முறையில் பங்களித்து வருகிறது. இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்வோருக்கான இணையவழி நுழைவுஇசைவு (விசா), அமைப்பின் பெரும்பாலான நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளை மேலும் கவர, இந்தியாவின் சுற்றுலாத் துறைக்கான இணையதளத்தில், வாரத்தின் அனைத்து நாள்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் ரஷிய மொழியிலான உதவி மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு: இணையவழி மருத்துவம், மருத்துவச் சுற்றுலா ஆகியவற்றில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான அனுபவங்களை மற்ற நாடுகளுக்கும் பயிற்சியளிக்க இந்தியா தயாராக உள்ளது. எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, மக்களின் வருங்காலத்தை அடிப்படையாகக் கொண்டது. அனைத்து நாடுகளுக்கும் சாதகமான பொருளாதாரச் சூழலை ஏற்படுத்த இந்தியா உறுதிகொண்டுள்ளது.
தற்போதைய நிலையில், எந்தவொரு நாடும் தனித்து இயங்க முடியாது; வளர்ச்சிக்கு மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. எனவே, பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கிய விதிமுறைகளை உலக வர்த்தக அமைப்பில் உருவாக்க வேண்டும். அந்த விதிமுறைகள் அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்க வேண்டும். முக்கியமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு அதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
எரிசக்தித் துறையில் சாதனைகள்: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா உறுதி ஏற்றுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் 6-ஆவது இடத்திலும், சூரியஒளி ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் 5-ஆவது இடத்திலும் இந்தியா உள்ளது. குறைந்த விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கில், “சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை’ மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கூட்டமைப்பில் இணைய எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
பேரிடர் காலங்களில் உரிய ஒத்துழைப்பை நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும். மற்ற நாடுகள் பேரிடரை எதிர்கொள்ளும் சமயங்களில், முதல் நாடாக இந்தியா உதவி வருகிறது. பேரிடரைத் தாங்கவல்ல கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவின் தலைசிறந்த 10 இலக்கியப் படைப்புகள் எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்று பிரதமர் மோடி பேசினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, கிர்கிஸ்தானில் இருந்து மோடி இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாடு
பயங்கரவாதம் இல்லா சமுதாயத்தை உருவாக்க இந்தியா உறுதிகொண்டுள்ளது. குறுகிய பார்வையைக் கைவிட்டு, பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுதிரள வேண்டும். பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து, நிதியுதவி செய்து வரும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டை நடத்த எஸ்சிஓ நாடுகள் முன்வர வேண்டும் என்றார் மோடி.
மோடி – இம்ரான் திடீர் சந்திப்பு
உச்சிமாநாட்டில் அனைத்து நாட்டுத் தலைவர்களும் ஒரே இடத்தில் கூடியபோது பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒரே இடத்தில் சந்தித்தனர். அப்போது, மீண்டும் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டதற்காக மோடிக்கு, இம்ரான் கான் வாழ்த்துத் தெரிவித்தார். இதனை மோடி ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்.
இந்த உச்சி மாநாட்டின்போது மோடியுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் தரப்பு விருப்பம் தெரிவித்தது. ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக நிறுத்தினால் மட்டுமே பேச்சு நடத்தப்படும் என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்துவிட்டது.
நல்லுறவில் மேம்பாடு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாடுகளுக்கும், இந்தியாவின் வரலாறு, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றுக்கும் ஆயிரம் ஆண்டுகால நெருங்கிய தொடர்பு உள்ளது. தற்போதைய நவீன காலத்தில், நமது ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேலும் மேம்படுத்துவது அவசியமாக உள்ளது. எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் மக்களுக்கிடையேயான ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்.
சுகாதாரம், பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், இலக்கியம் மற்றும் கலாசாரம், பயங்கரவாதம் இல்லா சமூகம், மனிதாபிமான உதவி ஆகியவற்றில் நாம் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பது, பிராந்திய ஒருமைப்பாடு, சிறந்த நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவை நமது நல்லுறவுக்கு அடிப்படையாக உள்ளன என்றார் பிரதமர்.